இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் செய்து இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் முதல் டி20 போட்டியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 


அதில் தீபக் ஹூடா மற்றும் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா 57 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர் விளாசி 104 ரன்கள் எடுத்தார். சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் விளாசி 77 ரன்கள் எடுத்தார். இதன்காரணமாக இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 225 ரன்கள் எடுத்தது. 


 






226 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கம் அளித்தனர். முதல் 5 ஓவர்களில் அயர்லாந்து அணி 70 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் ரவி பிஷ்னாய் தொடக்க ஆட்டக்காரர் ஸ்டெர்லிங் விக்கெட்டை வீழ்த்தினார். சிறப்பாக ஆடி வந்த பால்பிரையன் விக்கெட்டை ஹர்ஷல் பட்டேல் வீழ்த்தினார். எனினும் பின்னர் வந்த டெகோர் மற்றும் ஜார்ஜ் டாக்ரல் ஆகியோர் தொடர்ந்து அயர்லாந்து அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தி வந்தனர். 


ஆட்டத்தின் 18வது ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் வேறும் 7 ரன்கள் மட்டும் விட்டு கொடுத்தார். அடுத்து 19வது ஓவரை வீசிய ஹர்ஷல் பட்டேல் 14 ரன்கள் விட்டு கொடுத்தார். கடைசி ஓவரில் அயர்லாந்து அணி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கடைசி ஓவரை வீசிய உம்ரான் மாலிக் 13 ரன்கள் மட்டும் விட்டு கொடுத்தார். இதன்காரணமாக இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது. சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண