IPL 2025 Date: போடு வெடிய! ஐ.பி.எல். யுத்தம் தொடங்கும் தேதி அறிவிப்பு - எப்போது?
IPL 2025: நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடர் வரும் மார்ச் 23ம் தேதி தொடங்கும் என்று ராஜீவ் சுக்லா தகவல் தெரிவித்துள்ளார்.

IPL 2025: இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டது ஐ.பி.எல். தொடர். 18வது சீசனில் விளையாடுவதற்கான வீரர்கள் ஏலம் கடந்தாண்டு இறுதியில் நடந்தது.
ஐ.பி.எல். எப்போது தொடக்கம்?
புது வீரர்கள், பழைய வீரர்களுடன் 10 அணிகளும் புத்தம் புது முகத்துடன் களமிறங்க உள்ள நிலையில், இந்தாண்டு நடக்கும் ஐ.பி.எல். தொடர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடர் மார்ச் 23ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் பிசிசஐ சிறப்பு நிர்வாகக் குழு நடைபெற்றது. இதில், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, அவர் வரும் மார்ச் 23ம் தேதி ஐ.பி.எல். போட்டி தொடங்கும் என்று அறிவித்தார்.
தோனிக்கு கடைசி சீசன்?
கடந்த சீசனில் கொல்கத்தா அணி வெற்றி பெற்ற நிலையில், இந்த சீசனின் முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் புதிய வீரர்களுடன் ஒவ்வொரு அணியும் களமிறங்குவதால் இந்த சீசன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக, இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வென்று தந்த தோனி கடைசியாக விளையாடும் ஐ.பி.எல். தொடர் இதுவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால், சென்னை ரசிகர்கள் இந்த சீசனில் சி.எஸ்.கே. வெற்றி பெற்று தோனி வெற்றியுடன் விடைபெற வேண்டும் என்று விரும்புகின்றனர்.
ரசிகர்கள் உற்சாகம்:
அதேபோல ஒரு முறை கூட கோப்பை வெல்லாத ஆர்.சி.பி.அணி, 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற மும்பை அணிகளும் வெற்றி பெற முனைப்பு காட்டுவார்கள். ரோகித், தோனி, கோலி ஆகிய முன்னணி வீரர்களுடன் இளம் வீரர்கள், வெளிநாட்டு வீரர்களும் களமிறங்கும் இந்த தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபி முடிந்த சில நாட்களிலே இந்த தொடர் தொடங்க உள்ளது. ஏற்கனவே, இந்திய அணியில் இல்லாத வீரர்கள் ஐ.பி.எல். தொடருக்காக தயாராகி வருகின்றனர். ஐ.பி.எல். தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ஐ.பி.எல். ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.