வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் மித வேகப்பந்து வீச்சாளர் பொல்லார்ட். மும்பை இந்தியன்ஸ் அணியின் தூணாக விளங்கிய பொல்லார்ட் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது முடிவு மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மட்டுமின்றி ஐ.பி.எல். ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.


மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்ற அனைத்து முறையும் பொல்லார்ட்டின் பங்கு தவிர்க்க முடியாதது. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள பொல்லார்ட்டிற்கு அவரது நெருங்கிய நண்பரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரரும், குஜராத் அணியின் கேப்டனுமாகிய ஹர்திக் பாண்ட்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.




இதுதொடர்பாக ஹர்திக் பாண்ட்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “என்னுடைய பாலி( பொல்லார்ட்), களத்தில் உங்களுடன் இணைந்து விளையாடியது இதுவரையிலான எனது கேரியரில் சிறந்த அனுபவங்களில் ஒன்றாகும். சிறந்த வழிகாட்டி மற்றும் நண்பரை நான் பார்க்க முடியாது. ஒருபோதும் சோர்வாக நீங்கள் இருந்ததில்லை. உங்களுடைய புதிய அத்தியாயத்திற்கு வாழ்த்துகள்.










உங்கள் புதிய அத்தியாயத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. அச்சமற்ற கிரிக்கெட் வீரர்களின் மற்றொரு தலைமுறைக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பீர்கள். என் சகோதரரே அனைத்திற்கும் நன்றி. வாழ்த்துக்கள் மீண்டும் சந்திப்போம்.” என்று பதிவிட்டுள்ளார்.




மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து நீங்கினாலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்ற உள்ளார். மேலும், மும்பை இந்தியன்ஸ் எமிரேட் அணிக்காக ஆட உள்ளார். 36 வயதான பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 13 ஆண்டுகள் ஐ.பி.எல். போட்டிகளில் ஆடியுள்ளார்.


ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் பொல்லார்ட் 189 போட்டிகளில் ஆடி 16 அரைசதங்களுடன் 3 ஆயிரத்து 412 ரன்களை விளாசியுள்ளார். அதிகபட்சமாக 87 ரன்களை விளாசியுள்ளார். இவற்றில் 223 சிக்ஸர்கள் அடங்கும். பேட்ஸ்மேனாக மட்டுமின்றி பந்துவீச்சாளராகவும் ஐ.பி.எல். போட்டிகளில் 69 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.