நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கான புதிய கேப்டனாக, ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். 


புதிய கேப்டன் நியமனம்:


டெல்லி கேபிடல்ஸ் அணி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக டேவிட் வார்னரும், துணை கேப்டனாக அக்‌ஷரும் படேலையும் நியமிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், நடப்பாண்டு தொடரில் அவரால் விளையாட முடியாததால், ரிஷப் பண்டிற்கு பதிலாக வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு அந்த அணியின் இயக்குனராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு அந்த அணியின் ஆலோசகராக கங்குலி செயல்பட்டது நினைவுகூறத்தக்கது. 


 


ஐபிஎல் தொடரில் கேப்டனாக அசத்தல்:


ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் முதன்முறையாக டெல்லி அணிக்காக தான் களமிறங்கினார். அப்போது, 2009 மற்றும் 2013ம் ஆண்டுகளில் சில போட்டிகளில் அந்த அணிக்கு அவர் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.  அதைதொடர்ந்து 2014ம் ஆண்டு ஏலத்தில் ஐதராபாத் அணியால் வாங்கப்பட்ட வார்னர், அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்டு 2016ம் ஆண்டு கோப்பையையும் பெற்று தந்தார். ஐபிஎல் தொடரில் இதுவரை 69 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள வார்னர், 35 போட்டிகளில் வெற்றி பெற்று ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.  அதோடு 32 போட்டிகளில் தோல்விகளை சந்தித்ததோடு, 2 போட்டிகள் டிரா ஆகியுள்ளது.


பேட்டிங்கில் மிரட்டல்:


ஐபிஎல் தொடரில் இதுவரை 47.33 சராசரி மற்றும் 142.287 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2,840 ரன்களை சேர்த்துள்ளார்.  அதில் ஒரு சதம் மற்றும் 26 அரைசதங்கள் அடங்கும். கடந்த 2021ம் அண்டு வார்னர் மோசமான ஃபார்மில் இருந்ததால், ஐதராபாத் அணி அவரை ஆடும் லெவனில் எடுக்கவில்லை. இதையடுத்து, 2022ம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்னதாக அவரை விடுவித்தது. அதைதொடர்ந்து, நடைபெற்ற ஏலத்தில் 6.25 கோடிக்கு வார்னரை டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. அந்த தொடரில் 5 அரைசதங்கள் உட்பட 432 ரன்களை சேர்த்து, அந்த அணிக்கு கடந்த ஆண்டு அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையையும் வார்னர் பெற்றார்.


ரிஷப் பண்ட்:


ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி கடந்த ஆண்டு நூலிழையில் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 31ம் தேதியன்று கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பண்ட், தற்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறார். ஆனாலும், நடப்பாண்டு தொடரில் அவர் விளையாட வாய்ப்பில்லை. இதன் காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கான புதிய கேப்டனாக வார்னரும், துணை கேப்டனாக அக்‌ஷர் படேலும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆல்-ரவுண்டரான அக்‌ஷர் படேல் கடந்த சில மாதங்களாக ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட் என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.