கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ஐ.பி.எல். போட்டித்தொடர் வரும் 26-ந் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கடந்த சீசனில் இரண்டாம் இடத்தை பிடித்த கொல்கத்தா அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
இந்த முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய அணிகள், ஒவ்வொரு அணியிலும் புதிய வீரர்கள் இடம்பெற்றிருப்பதாலும் இந்த ஐ.பி.எல். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. கடந்தாண்டு பிற்பாதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நடப்பாண்டிற்கான 15வது ஐ.பி.எல். தொடரான டாடா ஐ.பி.எல். 2022 போட்டித்தொடர் கொரோனா தொற்று காரணமாக மும்பை மற்றும் புனேவில் மட்டுமே நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி கிடைக்குமா? என்று மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்க ஐ.பி.எல். நிர்வாகம் முடிவு செய்துள்ளது. போட்டிகள் நடைபெறும் மும்பை, நவி மும்பை மற்றம் புனே மைதானங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைப்படி 25 சதவீத ரசிகர்களுக்கு மட்டும் அனுமதி அளக்கப்படும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த சீசனுக்கான 74 ஐ.பி.எல். ஆட்டங்கள் மும்பை வான்கடே மைதானத்திலும், ப்ராபோர்ன் மைதானம், நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்திலும், புனேவில் உள்ள எம்.சி.ஏ. சர்வதேச ஸ்டேடியம் மைதானத்திலும் நடைபெற உள்ளது. ஐ.பி.எல். போட்டிகளை கண்டுகளிக்க 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஐ.பி.எல். ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்