இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயத்திலிருந்து குணம் அடைந்து இந்திய அணிக்கு திரும்பியிருந்தார். இவர் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணியில் களமிறங்கினார். அதில் முதல் போட்டியில் 175 ரன்களும் 9 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார். அதன்பின்னர் இரண்டாவது போட்டியில் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தற்போது மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ஏற்கெனவே முதலிடத்தில் இருந்த ஜடேஜா கடந்த வாரம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் ஜேசன் ஹோல்டரிடம் அந்த இடத்தை இழந்தார். இந்தச் சூழலில் தற்போது மீண்டும் அவர் முதலிடத்தை பிடித்துள்ளார். அந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் மற்றொரு இந்திய வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் இடம்பிடித்துள்ளார்.
அதேபோல் ஒருநாள் போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலில் ஜடேஜா தொடர்ந்து 10ஆவது இடத்தில் நீடிக்கிறார். அவர் 10ஆவது இடத்தை ஜிம்பாவே நாட்டைச் சேர்ந்த சியன் வில்லியம்ஸ் உடன் பகிர்ந்துள்ளார். ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.
அந்தப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரோகித் சர்மா 4ஆவது இடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பும்ரா மட்டும் டாப் 10 இடங்களில் இருக்கிறார். அவர் தற்போது 6ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்