காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய கைல் ஜேமிசனுக்கு பதிலாக, அணியில் இணைக்கப்பட்டுள்ள மாற்று வீரரின் பெயரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது. அதன்படி, தென்னாப்ரிக்காவை சேர்ந்த சிசண்டா மகலா மாற்று வீரராக சிஎஸ்கே அணியில் இணைக்கப்பட்டுள்ளார். 


ஐபிஎல் 2023:


ஐபிஎல் 2023 தொடர் வரும் 31 ம் தேதி கோலகலமாக தொடங்க உள்ளது. நடப்பாண்டிற்கான தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், நான்கு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய எம்எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் மோத உள்ளன. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.  


கைல் ஜேமிசன் விலகல்:


இந்தநிலையில் தான், கடந்த ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் சிஎஸ்கே அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட கைல் ஜேமிசன் நான்கு மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார். நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டரான இவரை அடிப்படை ஏலத்தொகையான ரூ.1 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக தற்போது கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கிறார். கடந்த ஜீன் மாதம் முதல் அவர் முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார்.  அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் நீண்ட காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று நியூசிலாந்து பயிற்சியாளர் கார் ஸ்டெட் தெரிவித்துள்ளார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து ஜேமிசன் முழுமையாக விலகினார்.


மாற்று வீரர் மகலா:


இந்நிலையில் தான், ஜேமிசனுக்கு மாற்றாக தென்னாப்ரிக்காவை சேர்ந்த சிசண்டா மகலா மாற்று வீரராக சிஎஸ்கே அணியில் இணைக்கப்பட்டுள்ளார். 32 வயதான இவர் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். தென்னாப்ரிக்கா அணிக்காக இதுவரை 4 சர்வதேச டி-20 போட்டிகளில் மட்டுமே இவர் விளையாடியுள்ளார். அதேநேரம், உள்ளூர் டி-20 போட்டிகளில் இவர் கவனம் ஈர்த்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த தென்னப்ரிக்கா டி-20 தொடரில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்  கேப் அணிக்காக இவர் விளையாடினார். 11 போட்டிகளில் பங்கேற்ற அவர் 8.68 என்ற எகானமி ரேட்டில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி கவனம் ஈர்த்தார். இந்நிலையில், அடிப்படை ஏலத்தொகையான ரூ.50 லட்சத்திற்கு சிசண்டா மகலாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: எம்.எஸ். தோனி (கேப்டன்& விக்கெட் கீப்பர்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயீன் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷர் மத்ஷோவ், துஷர் மத்ஷோவ், துஷர் மத்கே தேஷ்பான் பத்திரனா, சிமர்ஜீத் சிங், தீபக் சாஹர், பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், பகத் வர்மா மற்றும் சிசண்டா மகலா.