INDW vs SLW AsiaT20 2022 Final: மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பை தொடரில் இந்த முறை பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அமீரகம் மற்றும் மலேசியா ஆகிய அணிகள் பங்கேற்றன. அக்டோபர் 1-ஆம் தேதி மகளிருக்கான ஆசிய கோப்பைத் தொடர் தொடங்கியது.
லீக் போட்டிகள் முடிந்த நிலையில் நேற்று அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. அரையிறுதிக்கு இந்தியா, தய்ய்லாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றன. நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தாய்லாந்து அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. நேற்று நடந்த மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்தச் சூழலில் ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவின் வரலாறு என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆசிய கோப்பையில் இந்திய மகளிர் அணி:
இதுவரை நடைபெற்றுள்ள 7 ஆசிய கோப்பை மகளிர் தொடரில் இந்திய அணி அதிகபட்சமாக 6 முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளது. 4 முறை ஒருநாள் ஆசிய கோப்பையை தொடரையும், 2 முறை டி20 ஆசிய கோப்பை தொடரையும் இந்தியா வென்றுள்ளது. 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 ஆசிய கோப்பை தொடரை மட்டும் இந்திய அணி வெல்லவில்லை. 2018-ஆம் ஆண்டு இந்திய மகளிர் அணி பங்களாதேஷ் அணியிடம் தோல்வி அடைந்தது.
தற்போது வரை ஆசிய கோப்பை தொடரில் விளையாடியுள்ள 39 போட்டிகளில் இந்திய அணி 36 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே ஆசிய கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி மிகுந்த ஆதிக்கம் நிறைந்த அணியாக வலம் வருகிறது.
நாளை மதியம் ஒரு மணிக்கு தொடங்கும் இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணியும் இலங்கை மகளிர் அணியும் மோதிக் கொள்கின்றன. ஏற்கனவே இரு அணிகளும் நான்கு முறை இறுதிப் போட்டியில் மோதியுள்ளன. இதில் அனைத்து முறையும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. இதுவரை நேரடியாக மட்டும் இரு அணிகள் 21 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் இந்திய அணி 16 முறையும் இலங்கை 4 போட்டிகளில் இரு அணிகளும் 2008-ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டன. அதில் இந்திய அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல், இந்த சீசனில் நடைபெற்ற லீக் போட்டியிலும் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இதுவரை உள்ள ரெக்கார்டுகளைப் பார்க்கும் போதும் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக உள்ளது. ஆனாலும், டி20 போட்டியினைப் பொறுத்தவரை ஒரு பவுலர் அல்லது ஒரு ஹிட்டர் போட்டியின் தன்மையை ஒரு ஓவரில் மாற்றிவிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் இறுதிப் போட்டியில் மிகவும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டியை இந்திய அணி வென்றால் ஏழாவது முறையாக கோப்பையை வெல்லும். அதேபோல் இந்த ஆண்டு நடந்த ஆண்களுக்கான ஆசிய கோப்பைத் தொடரில் இலங்கை அணி கை பற்றியிருந்தது. அதுபோல் இலங்கை பெண்கள் அணியும் ஆசிய கோப்பையை வெல்லுமா என நாளை மதியம் ஒரு மணிக்கு நடக்கும் போட்டியில் பொறுத்திருந்து பார்க்கலாம்.