இந்தியா மகளிர் மற்றும் வங்கதேச மகளிர் இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண ஒருநாள் தொடர் டிராவில் முடிந்தது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் கடைசி போட்டியில் யாருக்கு கோப்பை என்ற நிலையில் களமிறங்கியது. ஆனால், இந்த போட்டியும் டையில் முடிந்து, போட்டி தொடரும் டையில் முடிந்தது. 


முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணிக்கு 225 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.  226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியும் 225 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 


தொடரின் முதல் போட்டியில் வங்கதேசமும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 






போட்டி சுருக்கம்: 


டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச மகளிர் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணியில் பர்கானா ஹக் 160 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் எடுத்தார். இவருக்கு உறுதுணையாக ஷமிமா சுல்தானா 78 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்தார். 


கேப்டன் நிகர் சுல்தானா 36 பந்துகளில் 24 ரன்களும், ரிது மோனி 2 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். ஷோபனா ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் எடுத்தார். 


வங்கதேசம் கொடுத்த இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷெபாலி வர்மா ஆகியோர் ஓப்பனிங் செய்தனர். மந்தனா 85 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்தார்.  3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஷெபாலியும், யாஸ்திகா பாட்டியா 5 ரன்கள் எடுத்த நிலையிலும் பெவிலியன் திரும்பினர். அடுத்து உள்ளே வந்த ஹர்லீன் தியோல் 108 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உதவியுடன் 77 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 14 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.


தீப்தி சர்மா 1 ரன், அமன்ஜோத் கவுர் 10 ரன்கள் மட்டுமே எடுக்க, ஸ்னே ராணா மற்றும் தேவிகா வைத்யா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் இறுதிவரை நின்று 45 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் மேக்னா சிங் 6 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இதனால் போட்டி டை ஆனது.