INDvsNZ 3RD ODI: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஹாஹ்லி ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இறுதி ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச முடிவு செய்துள்ளார்.
இதற்கு முன்னதாக, நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் செடன் பார்க்கில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக கைவிடப்பட்டது. முன்னதாக, இந்த போட்டி அவுட்ஃபீல்ட் ஈரப்பதமாக இருந்த காரணத்தால் டாஸ் போடுவது தாமதம் ஆனது. பின்னர், நான்கு ஓவர்கள் மட்டுமே இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில், மீண்டும் ஆட்டம் மழையால் பாதியிலே நிறுத்தப்பட்டது.
பின்னர், சுமார் 4 மணி நேரம் இடைவேளைக்கு பிறகு ஆட்டம் 29 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டு தொடங்கியது. 4.5 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ஷிகர்தவான் 3 ரன்களில் அவுட்டாகினார்.
இதையடுத்து, சுப்மன்கில்லுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். வெறும் 29 ஓவர்கள் மட்டுமே ஆட்டம் என்பதால் இருவரும் அதிரடியாக ஆடத் தொடங்கினர். சுப்மன்கில் பவுண்டரிகளாக விளாச, சூர்யகுமார் யாதவ் சிக்ஸர்களாக விளாசினார்.
இருவரும் இணைந்து 12.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. சுப்மன்கில் 42 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 45 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்ளுடன் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் களத்தில் இருந்தனர்.
மழையால் மீண்டும் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் விரக்தியடைந்தனர். மழை விடாமல் பெய்து கொண்டே இருந்ததால் போட்டி நடுவர்கள் இந்த போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர். இதையடுத்து, ஹாமில்டன் நகரில் நடைபெற்ற இந்த இரண்டாவது போட்டி எந்த முடிவுமின்றி கைவிடப்பட்டது. இரு அணிகளின் அதிரடியையும் காணலாம் என்று வந்த இரு நாட்டு ரசிகர்களும் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இதனால், இரு அணிகளும் இன்று மோதும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. அந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். ஏற்கனவே இந்த தொடரில் நியூசிலாந்து அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சஞ்சு சாம்சன் இல்லை
ஏற்கனவே சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வந்த நிலையில் இந்த போட்டியிலும் அவருக்கு ப்ளேயிங் லெவனில் இடம் அளிக்கப்படவில்லை.
இந்திய அணி அணி; ஷிகர் தவான்(கேப்டன்), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
நியூசிலாந்து அணி: ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன்(கேப்டன் ), டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, மாட் ஹென்றி, டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன்