IND Vs SA 1st ODI Records: இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தென்னாப்ரிக்கா அணி வெறும் 116 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகியுள்ளது.
இந்தியா - தென்னாப்ரிக்கா மோதல்:
தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது. ஜோகன்ஸ்பெர்க்கில் நடைபெறும் முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணி அபார பந்துவீச்சு:
இதையடுத்து உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்ரிக்கா அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், தென்னாப்ரிக்க வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஆண்டிலே 33 ரன்களையும், ஜோர்ஜி 28 ரன்களையும் சேர்த்தனர். 7 வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் தென்னாப்ரிக்கா அணி 27.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங், 10 ஓவர்களை வீசி 37 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில், அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்ஸ் வீழ்த்துவதே இதுவே முதல்முறையாகும். அவருக்கு உறுதுணையாக ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.
உள்ளூரில் மோசமான சாதனை:
116 ரன்களுக்கு ஆட்டமிழந்ததன் மூலம், மோசமான சாதனை படைத்துள்ளது. அதாவது, உள்ளூரில் விளையாடிய ஒருநாள் போட்டியில் அந்த அணி பதிவு செய்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். முன்னதாக, கடந்த 2018ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக 118 ரன்களை எடுத்தது தான், உள்ளூரில் அந்த அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். அதோடு, ஒருநாள் போட்டிகளில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட 10வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். முன்னதாக அண்மையில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பையில், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்ரிக்கா அணி வெறும் 83 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளில் அந்த அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான்.