Commonwealth Womens Cricket 2022:  காமன்வெல்த் போட்டியில் இந்தியா இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. 


இந்த டி20 போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணியில் அதிகபட்சமாக அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 32 பந்துகளில் 8 ஃபோர், மூன்று சிக்ஸர் உட்பட 61 ரன்கள் விளாசியுள்ளார். இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரை ஃப்ரெயா கெம்ப் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.போட்டியின் தொடக்கத்தில் இருந்து நிதானமாக ஆடிய இந்திய அணி,  போட்டியின் 20 ஓவரில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. 


இதற்கு முன்னர், காமன்வெல்த் போட்டியில் குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணியும், பார்படாஸ் பெண்கள் அணியும் நேருக்கு நேர்  மோதினர். முதலில் டாஸ் வென்ற பார்படாஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா களமிறங்கினர். 


இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஸ்மிருதி மந்தனா 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க, மற்றொரு தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா வழக்கம்போல தனது அதிரடியை தொடர்ந்தார். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி 26 பந்துகளில் 43 ரன்கள் அடித்து ரன் அவுட் முறையில் வெளியேறினார். 


ஹர்மன்பிரீத் கவுர் கோல்டன் டக் மூலம் ஆட்டமிழக்க, இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்களுக்கு தடுமாறியது. 3 வதாக களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் எடுத்தார். ஜெமிமா மற்றும் தீப்தி சர்மா  ஐந்தாவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் சேர்த்து இந்தியா 160 ரன்களை கடக்க உதவி செய்தனர். 


20 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்திருந்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 56 ரன்களுடனும், தீப்தி சர்மா 34 ரன்களுடனும் கடைசி வரை அவுட்டாகமல் களத்தில் இருந்தனர். 


163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பார்படாஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் 4 விக்கெட்களை வேக புயல் ரேணுகா சிங் டக்கென்று கைப்பற்ற, இந்தியாவின் பக்கம் வெற்றி காற்று அடிக்க தொடங்கியது. 


தொடர்ந்து பார்படாஸ் அணியின் விக்கெட்கள் வரிசையாக சரிய, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் 62 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய பெண்கள் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 


பார்படாஸ் அணியில் அதிகபட்சமாக கிஷோனா நைட் 16 ரன்களும், ஷகேரா செல்மன் 12 ரன்களும் எடுத்திருந்தனர். 


இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்களும், மேகனா, சினே ராணா, ராதா யாதவ் மற்றும் ஹர்மன் தலா 1 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான காமன்வெல்த் முதல் போட்டியிலும் ரேணுகா சிங் 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.