இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கலக்கி வருபவர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான். தோனி கேப்டன்சியில் தொடங்கி தற்போது விராட் கோலியின் கேப்டன்சி வரை அசத்தலாக இந்தியாவின் மேட்ச் வின்னராக அஸ்வின் இருந்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் நிறையே சாதனைகளை படைத்துள்ளார். அவருடைய பயணம் அந்த அளவிற்கு நீண்ட நெடிய பயணமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் அவருடைய சிறப்பான பந்துவீச்சு தொடர்ந்து வருகிறது. சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளார். அப்பட்டியலில் முதல் இடத்தில் பேட் கம்மின்ஸ் நீடித்து வருகிறார். இந்த இருவரும் டெஸ்ட் போட்டிகளில் அசைக்க முடியாத பந்துவீச்சாளர்களாக உள்ளனர். அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலிலும் இந்த இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக அஸ்வின் தான் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் பேட் கம்மின்ஸ் உள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள்:
பந்துவீச்சாளர் | இன்னிங்ஸ் | விக்கெட் |
அஸ்வின் | 30 | 85 |
பேட் கம்மின்ஸ் | 30 | 77 |
பிராட் | 34 | 70 |
ஷஹின் ஆஃப்ரிதி | 26 | 64 |
டிம் சவுதி | 26 | 64 |
இந்தப் பட்டியலில் முதல் 5 இடங்களில் இடம்பெற்ற ஒரே சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் மட்டும் தான். மேலும் இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் இரு சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். ஒருவர் அஸ்வின் மற்றொருவர் நாதன் லயான்(60 விக்கெட்). டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் விக்கெட் வேட்டையில் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இனி இந்திய அணி அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளை தென்னாப்பிரிக்காவில் விளையாட உள்ளது. அங்கு ரவிச்சந்திரன் அஸ்வின் விக்கெட் வீழ்த்தி மேலும் இந்தப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை பிடிப்பார் என்று கருதப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவில் டெஸ்டில் அஸ்வின்:
போட்டிகள் | விக்கெட்கள் | சிறந்த பந்துவீச்சு |
3 | 7 | 4/113 |
தென்னாப்பிரிக்காவில் அஸ்வின் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். ஆகவே இம்முறை அதை மாற்றி அதிகமான விக்கெட்களை எடுப்பார் என்று கருதப்படுகிறது. ஜடேஜா அணியில் இல்லாத்தால் அஸ்வின் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கோலி போன் ஸ்விட்ச் ஆப்..! கங்குலி விளக்கம் சரியில்லை.! நொந்து பேசிய பயிற்சியாளர்.!