இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு தெலங்கானா அரசு அண்மையில் டிஎஸ்பி பொறுப்பு வழங்கி கவுரவித்தது இச்சூழலில், இதற்கு முன்னர் இது போன்ற அரசு பொறுப்புகளை வகித்த இந்திய வீரர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.


சச்சின் டெண்டுல்கர்:


உலக கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் குரூப் கேப்டன் பதவியில் இருந்து வருகிறார். எந்த முன் அனுபவமும் இல்லாமல் ரேங்க் வைத்திருக்கும் முதல் இந்திய தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றார் சச்சின் டெண்டுல்கர். பல விமானப்படை நிகழ்ச்சிகளிலும் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்றுள்ளார்.


எம்.எஸ்.தோனி:


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. இவர் 2011 முதல் இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பதவியில் உள்ளார். தோனி காஷ்மீரில் ராணுவத்தினரிடம் பயிற்சியும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கே.எல்.ராகுல்:


இந்திய பேட்ஸ்மேன் கே.எல் ராகுல் 2018 முதல் இந்திய ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். விளையாட்டு துறையின் கீழ் அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கிக்கு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும்  கே.எல். ராகுல் நடத்தியுள்ளார். 


யுஸ்வேந்திர சாஹல்:


ஹரியானாவில் வருமான வரித்துறை அதிகாரியாக யுஸ்வேந்திர சாஹல் பணியாற்றி வருகிறார். ஹரியானா அவரது சொந்த மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.


முகமது சிராஜ்:


கிரிக்கெட் வீரர் முகமது சிராஜுக்கு விளையாட்டு துறையில் அவர் அளித்த பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக தெலங்கானா அரசு டிஎஸ்பி பொறுப்பு வழங்கி கவுரவித்துள்ளது.


ஜோகிந்தர் ஷர்மா:


2007 டி20 உலகக் கோப்பை ஹீரோ ஜோகிந்தர் ஷர்மா இப்போது ஹரியானா காவல்துறையில் டிஎஸ்பியாக பணிபுரிகிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், போலீஸ் பணியை முழுமையாக ஏற்றுக்கொண்டார்.


கபில் தேவ் (லெப்டினன்ட் கர்னல் இந்திய ராணுவம்):


1983 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு நாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர் கபில் தேவ். அதை கவுரவிக்கும் வகையில் இந்திய ராணுவம் லெப்டினன்ட் கர்னல் பொறுப்பை வழங்கியது. இந்திய அணிக்காக 131 டெஸ்ட் மற்றும் 255 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் கபில் தேவ்.


ஹர்பஜன் சிங்:


இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பஞ்சாப் அரசால் துணை எஸ்பியாக நியமிக்கப்பட்டார். தற்போது ஹர்பஜன் ஆம் ஆத்மி கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார். ஹர்பஜன் இந்தியாவுக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளையும், 236 ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.