மகாராஷ்டிராவின் நாக்பூரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் பெயரில் ப்ளாட் வாங்குவதாக கூறி, அவரது நண்பரும், மேலாளருமான ஷைலேஷ் தாக்ரே ரூ. 44 லட்சம் மோசடி செய்ததாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
உமேஷ் யாதவை ஏமாற்றிய மேலாளர்
நாக்பூரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் அளித்த புகாரின் பேரில் மோசடி செய்ததாக ஷைலேஷ் தாக்ரே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொரடியில் வசிக்கும் ஷைலேஷ் தாக்ரே (37), உமேஷ் யாதவின் நண்பர் என்பதும் அவரது மேலாளராக இருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லையோ என்பது குறிப்பிடத்தக்கது.
2014 இல் இருந்து உடனிருப்பவர்
உமேஷ் யாதவ் இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர் தனது நண்பரான தாக்ரேவை ஜூலை 15, 2014 அன்று தனது மேலாளராக நியமித்தார், என முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) மேற்கோள் காட்டி நாக்பூர் டிசிபி அஸ்வினி படேல் கூறினார்.
நிதி பணிகளை கையாண்டார்
"தாக்ரே காலப்போக்கில் உமேஷ் யாதவின் நம்பிக்கையைப் பெற்றார். உமேஷ் யாதவின் அனைத்து நிதி விவகாரங்களையும் அவர் கையாளத் தொடங்கினார். அவர் உமேஷ் யாதவின் வங்கிக் கணக்கு, வருமான வரி மற்றும் பிற நிதிப் பணிகளைக் கையாண்டார்," என்று அவர் கூறினார். உமேஷ் யாதவ் நாக்பூரில் நிலம் வாங்கத் தேடுவதாகவும், தாக்ரேவிடம் கேட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
ரூ.44 லட்சம் மோசடி
"தாக்ரே ஒரு தரிசு பகுதியில் ஒரு நிலத்தை பார்த்துள்ளார். அவர் உமேஷ் யாதவிடம் அதை ரூ. 44 லட்சத்திற்குப் பெற்றுத் தருவதாகக் கூறினார். உடனே உமேஷ் யாதவ் ரூ. 44 லட்சத்தை ஷைலேஷ் தக்ரேவின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தார். அதன் பிறகு நிலத்தை உமேஷ் யாதவ் பெயரில் வாங்காமல், ஷைலேஷ் தாக்கரே தனது பெயரில் அந்த இடத்தை வாங்கினார்," என்று அதிகாரி கூறினார்.
மோசடி பற்றி உமேஷ் யாதவ் அறிந்ததும், இடத்தை தனது பெயருக்கு மாற்றுமாறு ஷைலேஷ் தாக்ரேவிடம் கேட்டுள்ளார், ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். பணத்தையும் திருப்பித் தர மறுத்துவிட்டார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். "உமேஷ் யாதவ் கொரடியில் போலீசில் புகார் செய்தார், அதைத் தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 406 (நம்பிக்கை மீறலுக்கான தண்டனை) மற்றும் 420 (ஏமாற்றுதல் மற்றும் அதன் மூலம் நேர்மையற்ற முறையில் சொத்தை வழங்குதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது," என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.