ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் களத்திற்கு திரும்புவது குறித்து நீண்ட நாட்களாக சஸ்பென்ஸாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் முழுமையான உடற்தகுதி பெறவில்லை என்ற தகவல் வெளியாகியது. 


அதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்தும் பும்ரா நீக்கப்பட்டார். இந்த சூழலில், பும்ரா தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) பயிற்சி போட்டிகளில் விளையாடி வருவதாகவும், அங்கிருந்து சர்வதேச அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிகிறது. 


தீவிர பயிற்சியில் பும்ரா:


இதுகுறித்து தனியார் ஸ்போர்ட்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ பும்ரா கடந்த 10 நாட்களாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் சில பயிற்சி போட்டிகளில் விளையாடுவதை காண முடிந்தது. இருந்தும் அவருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதி கிடைக்கவில்லை. பும்ராவின் உடல்தகுதியை பி.சி.சி.ஐ. தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 


பும்ராவின் தீவிரமாக கண்காணித்து வருவதால் அவர் மீது அதிகபடியான பணிச்சுமை உள்ளது. ஐபிஎல்-லுக்குப் பிறகு நடைபெறவுள்ள WTC இறுதிப் போட்டியிலும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையிலும் பும்ராவின் இருப்பு இந்திய அணிக்கு மிக முக்கியம்.


ஐபிஎல்-லில் களமிறங்கும் பும்ரா:


வருகின்ற ஐபிஎல் 2023 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பும்ரா நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்க இருக்கிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்குள் அவர் முழு உடற்தகுதி பெறுவார் என்று நம்பப்படுகிறது. இந்திய அணிக்கு பும்ராவின் தேவை எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணியும் பும்ராவின் வருகைக்காக காத்திருக்கிறது. 


கடந்த 2022 ஜூலை மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது பும்ராவிற்கு காயம் ஏற்பட்டது. அதன்பிறகு கடந்த 7 மாதங்களில் இரண்டு டி20 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடியுள்ளார். கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது வரை இந்திய அணிக்கு திரும்பவில்லை. 


இந்தியாவிற்கே முக்கியத்துவம்:


பும்ரா குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, “நீங்கள் முதலில் இந்திய வீரர்கள், அதன்பிறகு ஐபிஎல் தொடரில் விளையாடலாம். ஐபிஎல் தொடரில் பும்ராவிற்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால், பிசிசிஐ முன் வந்து உரிமையாளர்களிடம் பேசி அவரை விடுவிக்க வேண்டும். மும்பை அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சருடன் இணைந்து ஏழு போட்டிகளில் பும்ரா விளையாடாவிட்டால் உலகம் ஒன்றும் அழியாது.


பும்ரா உடல் தகுதியுடன் இருந்தால், அவர் இரானி டிராபி மற்றும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். ஆனால் ஐபிஎல் போட்டிக்கு இன்னும் ஒரு மாதம் உள்ளது, அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா இல்லையா என்பது கூட தெரியவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. எனவே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன், பும்ரா சில சிவப்பு பந்து போட்டிகளில் விளையாட வேண்டும். இதனால் அவரது உடற்தகுதி பற்றி நாம் அறிய முடியும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு வெற்றிகளுடன், இந்திய அணி WTC இன் இறுதிப் போட்டிக்கு வரும்” என்று தெரிவித்தார்.