இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி. இவரது மனைவி அனுஷ்கா சர்மா. கிரிக்கெட் உலகிலே மிகவும் அழகான தம்பதியினராக வலம் வரும் விராட்கோலி – அனுஷ்கா சர்மாவிற்கு வாமிகா என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்து ஓராண்டாகியும் இதுநாள் வரை வாமிகாவின் புகைப்படங்ளை விராட்கோலியும் – அனுஷ்காவும் வெளியிட்டதே இல்லை.


ஆனால், வாமிகாவின் பின்புறத் தோற்றத்தையும், வாமிகாவை விராட் – அனுஷ்காவும் கொஞ்சும் புகைப்படங்கள் மட்டுமே வெளியாகி வந்தது. இந்த நிலையில், முதன்முறையாக வாமிகாவின் முகம் இன்று வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.




இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் 288 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்காக முன்னாள் கேப்டன் விராட்கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 84 பந்தில் 5 பவுண்டரியுடன் 65 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.


அவர் அரைசதம் அடித்தவுடனே பெவிலியனில் இருந்த இந்திய வீரர்கள் அனைவரும் கைதட்டி பாராட்டினர். அப்போது, பெவிலியன் உள்ளே இருந்து விராட்கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா தனது குழந்தையான வாமிகாவுடன் வெளியே வந்தார்.  இதுநாள் வரை கேமராவின் கண்களிலே படாமல் வந்த வாமிகாவை மைதானத்தில் இருந்த கேமரா மூலமாக இந்த உலகத்திற்கு முதன்முறையாக அறிமுகமானார்.






தனது மகளை பார்த்த மகிழ்ச்சியில் அரைசதம் அடித்த விராட்கோலி, தனது பேட்டையே குழந்தையை தாலாட்டுவது போல தாலாட்டி தனது குழந்தையை பார்த்து ரசித்தார். அனுஷ்கா சர்மாவும் கைதட்டி கோலியை உற்சாகப்படுத்தியதுடன் தனது மகளிடமும் தந்தை கோலியைப் பார் என்று சைகை செய்தார். மழலை வாமிகா அங்குமிங்கும் சுற்றிப்பார்த்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.




வாமிகாவின் புகைப்படத்தை கோலி – அனுஷ்கா சர்மா ரசிகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், தனது மகளைப் பார்த்து கோலி பேட்டை வைத்து தாலாட்டிய வீடியோவையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண