கடந்த டிசம்பர் 8-ம் தேதி அன்று, இந்திய கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டது. அதாவது இனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டின் இந்திய அணி கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. ஏற்கெனவே டி20 தொடர்களுக்கு அவர் கேப்டனாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு நாள் அணிக்கும் அவர் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.


பிசிசிஐயின் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பும், எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பின. ஆனால், ஒரு நாள், டி20 என வைட் பால் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ரோஹித் ஷர்மாவுக்கு கேப்டன்சி புதிதல்ல. ஐபிஎல் தொடரில், ரோஹித் தலமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. மேலும், கோலி இல்லாதபோது இந்திய அணியை நிறைய முறை வெற்றிகரமாக வழிநடத்தி இருக்கிறார் ரோஹித். 


இந்நிலையில், ‘பேக்ஸ்டேஜ் வித் போரியா’ என்ற விளையாட்டு நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் ரோஹித் ஷர்மாவின் நேர்காணல் இடம் பெற்றுள்ளது. இதில், கேப்டன்சி குறித்தும், கோலி குறித்தும் ரோஹித் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.



அப்போது, “சரியான வீரர்கள் விளையாடுகிறார்களே என்பதை உறுதி செய்வது ஒரு கேப்டனின் வேலை. வீரர்களை சரியாக தேர்வு செய்ய வேண்டும். மேலும், சில முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். விளையாட்டின்போது ஒரு கேப்டன் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்.


கோலி பற்றி பேசுகையில், ”கோலி போன்ற ஒரு தரமான பேட்டர் இந்திய அணிக்கு மிக அவசியம். அது இந்திய அணிக்கு பலம் சேர்க்கும். டி20 கிரிக்கெட்டில் 50+ சராசரி வைத்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. கோலியின் அனுபவம், கடினமான சூழலிலும் இந்திய அணிக்கு மிகவும் ஆதராவக இருந்திருக்கிறது.


அவரின் இருப்பு இந்திய அணிக்கு அவசியம். இன்னும் அவர் இந்திய அணியின் தலைமையே. இவை அனைத்தையும் சேர்த்து பார்த்தால், அவரை நீங்கள் எளிதில் ஒதுக்கிவிட முடியாது. இந்திய அணியில் கோலி இருப்பது, அணிக்கு மிக மிக முக்கியம். அவரது இருப்பு இந்திய அணிக்கு கண்டிப்பாக பலம் சேர்க்கும்” என தெரிவித்திருக்கிறார்.


பிசிசிஐயின் ரோஹித் கேப்டன்சி அறிவிப்புக்கு பிறகு, இந்திய அணியின் கேப்டனாக நல்ல ரெக்கார்டு இருந்தும் கோலி ஒதுக்கப்படுகிறார் என்பதும், அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதுமே கிரிக்கெட் ரசிகர்கள் சிலரின் கருத்தாக உள்ளது. ஆனால், ரோஹித் - கோலி இடையே நல்ல புரிதல் இருந்து இரு கேப்டன்களும் இந்திய அணியை டெஸ்ட், ஒரு நாள், டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக வழிநடத்தி செல்ல வேண்டும் என்பதே பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பம். 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண