Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி

Team India Met PM Modi: ஐசிசி டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள், பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Continues below advertisement

Team India Met PM Modi: ஐசிசி டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு,  பிரதமர் மோடி தனது இல்லத்தில் சிறப்பு விருந்தளித்தார்.

Continues below advertisement

பிரதமரை சந்தித்த இந்திய வீரர்கள்:

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற, ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலக கோப்பையையும், 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பையையும் வென்றதற்காக, இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இன்று காலை தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்கள், டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்தனர்.

விருந்து வழங்கி அசத்திய பிரதமர் மோடி:

சிறப்பு பேருந்து மூலம் பிரதமரின் இல்லத்திற்கு சென்ற இந்திய அணி வீரர்கள், கோப்பையை பிரதமரிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர். கலந்துரையாடலை தொடர்ந்து அவர்களுக்கு பிரதமர் மோடி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறப்பு விருந்து தொடங்கியது. அதன்படி, உலக கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான அணியில் இடம்பெற்று இருந்த அனைத்து வீரர்களும் விருந்தில் இடம்பெற்றனர். அதாவது விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் பிரதமர் இல்ல விருந்தில் பங்கேற்றனர். பயிற்சியாளர் டிராவிட் உள்ளிட்டோரும் விருந்தில் கலந்துகொண்டனர். 

மும்பையில் பேரணி:

பிரதமர் மோடி உடனான சந்திப்பு நிறைவடைந்ததுமே, இந்திய அணி வீரர்கள் டெல்லியில் இருந்து மும்பை புறப்பட உள்ளனர். அங்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வான்கடே மைதானம் வரை திறந்தவெளி பேருந்தில் டி20 உலகக் கோப்பையுடன் ஊர்வலமாக செல்ல இருக்கின்றனர். மாலை 5 மணிக்கு இந்த பேரணி தொடங்க உள்ளது. அதன் முடிவில் வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்களுக்கான பாராட்டு விழாவும் நடைபெற உள்ளது. இந்த ஊர்வலம் மற்றும் பாராட்டு விழாவை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையில் நேரடியாக கண்டுகளிக்கலாம்.

Continues below advertisement