இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 4 டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளுடன் உள்ளன.
இரு அணிகளுக்கும் இடையிலான நேற்று நடந்த 4வது டி20 போட்டியில் இந்திய அணி, 3 ஓவர்கள் மீதம் வைத்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இது சர்வதேச டி20 போட்டியில் இந்தியாவின் 34வது சத பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது.
டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக சதம் பார்ட்னர்ஷிப் செய்த இந்திய அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. அதேநேரத்தில், இதுவரை அதிக டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி, இந்த சாதனை பட்டியலில் இந்திய அணிக்கு பின்னாடிதான் உள்ளது. இதுவரை 203 டி20 போட்டிகளில் இந்திய அணி 34 சத பார்ட்னர்ஷிப்களை செய்துள்ளது. அதே நேரத்தில், அதிகபட்சமாக 223 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தானில் இருந்து 30 சத பார்ட்னர்ஷிப்கள் மட்டுமே செய்துள்ளன.
இந்தப் பட்டியலில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முறையே தலா 26 சதம் பார்ட்னர்ஷிப்களுடன் மூன்று, நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன. இது தவிர நியூசிலாந்து அணி 25 சத பார்ட்னர்ஷிப்களுடன் 6வது இடத்தில் உள்ளது.
சர்வதேச T20 போட்டிகளில் அதிக சதம் பார்ட்னர்ஷிப் செய்த அணிகள்
- இந்தியா - 34
- பாகிஸ்தான் - 30
- இங்கிலாந்து - 26
- ஆஸ்திரேலியா - 26
- தென்னாப்பிரிக்கா - 26
- நியூசிலாந்து - 25.
ரோஹித் - கே.எல்.ராகுல் சாதனையை சமன் செய்த கில் - ஜெய்ஸ்வால்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி20 சர்வதேச போட்டியில், சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் விக்கெட்டுக்கு 165 ரன் எடுத்தனர். டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும். முன்னதாக, கடந்த 2017ம் ஆண்டு ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் 165 ரன்கள் எடுத்திருந்தனர். இதன்மூலம் ரோஹித் - கே.எல்.ராகுல் சாதனையை கில் - ஜெய்ஸ்வால் சமன் செய்தது. இந்த பட்டியலில், தீபக் ஹூடாவும், சஞ்சு சாம்சனும் 176 ரன்களின் பார்ட்னர்ஷிப்பில் முதலிடத்தில் உள்ளனர்.
நேற்றைய போட்டி சுருக்கம்:
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 178 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 51 பந்துகளை எதிர்கொண்ட இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் எடுத்தார். இதில், 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களும் அடங்கும். அதேபோல், மற்றொரு தொடக்க வீரரான சுப்மன் கில் 47 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். இதில், 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளை அடங்கும். இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 38 ரன்கள் விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.