ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து, அஸ்வின் 8 விக்கெட்டுகளையும், ஜடேஜா 7 விக்கெட்டுகளையும் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.
ரோகித் எதிர்கொண்ட சவால்
அவர்களின் செயல்பாடு தொடர்பாக போட்டி முடிந்த பிறகு வர்ணனையாளர்களுடன் கலந்துரையாடிய கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அணியில் திறமையான 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதும், அவர்கள் சிறப்பாக செயல்படுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அணியில் மற்ற வீரார்களை கையாள்வதை காட்டிலும், ஜடேஜா மற்றும் அஸ்வினை கையாள்வது கடினமானதாக உள்ளது.
ஒரு புறம் நான் 250வது விக்கெட்டை எடுக்க வேண்டும் என்னிடம் பந்தை கொடுங்கள் என ஜடேஜா கேட்கிறார். மற்றொரு புறம் 4 விக்கெட்களை எடுத்துவிட்டேன். 5 விக்கெட்ஸை பூர்த்தி செய்ய வேண்டும் என அஸ்வின் கேட்கிறார். அவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு அதுதான் நான் எதிர்கொண்ட சவாலாக இருந்தது. சாதனைகளை பற்றி நான் பெரிதாக அறிந்திருக்கவில்லை.
ஆனால், அவர்கள் இருவருக்கும் அதுகுறித்து நன்றாக தெரிந்து இருந்தது. அவர்கள் இருவரும் தரமான பந்துவீச்சாளர்கள். அவர்களை சரியான எண்டிலிருந்து பந்துவீச வைக்க வேண்டும் என்ற அழுத்தம் எப்போதும் என்மீது உள்ளது” என ரோகித் சர்மா கூறினார். இந்த போட்டியில் ஜடேஜா தனது 250 விக்கெட்டையும் பூர்த்தி செய்தார். அஸ்வினும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அந்த 3 பேருக்கு சமம்...
முன்னதாக பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது பேசிய ரோகித் சர்மா, ”திறமையான சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்ஷர் படேல் ஆகியோரை வழிநடத்துவது என்பது, ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் மற்றும் ஹேசல்வுட் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை வழிநடத்துவது போன்றது என பாராட்டினார். நாக்பூர் போன்ற மைதானங்களில் பல ஆண்டுகள் விளையாடி, பெரும் அனுபவத்தை கொண்ட அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்ஷர் போன்ற வீரர்கள் அணியில் இருப்பது பெரும் அதிர்ஷ்டம்.
அவர்கள் ஒருபோதும் உங்களை ஏமாற்றமட்டார்கள். மைதானத்தில் உள்ள சூழலை பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே நல்ல முடிவு கிடைக்கும். மைதானம் இந்திய தரப்புக்கு மட்டுமின்றி, இரண்டு தரப்பினருக்குமே சாதகமாக தான் இருந்தது” எனவும் ரோகித் சர்மா பேசினர்.