இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு டிசம்பர் 13ம் தேதி எப்போதும் சிறப்பான நாளாகவே இருந்து வருகிறது. ரோஹித் சர்மா தனது காதலியான ரித்திகா சஜ்தேவை டிசம்பர் 13ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இன்றோடு இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 


ரோஹித் சர்மாவும், ரித்திகா சஜ்தேவும் திருமணத்திற்கு முன்பு 6 வருடங்கள் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். முதன்முறையாக, போரிவலி ஸ்போர்ட்ஸ் கிளப்பில் ரோஹித் சர்மா, ரித்திகாவிடம் காதலை வெளிப்படுத்தினார். 


2015 ம் ஆண்டு நடந்த திருமணம்:


2015ம் ஆம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி ரோஹித் சர்மா, ரித்திகா சஜ்தேவை திருமணம் செய்து கொண்டார். அதேபோல், தங்களது இரண்டாவது திருமண விழாவில் ரோஹித் சர்மா, ரித்திகா சஜ்தேவுக்கு மறக்க முடியாத பரிசு ஒன்றை வழங்கினார். அது இன்றளவும் எந்தவொரு கிரிக்கெட் ரசிகர்களாலும் மறக்க முடியாது. கடந்த 2017ம் ஆண்டில் ரசிகர்கள் நிரம்பிய மைதானத்தில் இலங்கைக்கு எதிராக இரட்டை சதம் அடித்த ரோஹித் சர்மா, அதை தனது மனைவிக்கு அர்ப்பணித்தார். ரோஹித் சர்மாவின் இந்த இரட்டை சதத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். 






சிறப்பு பரிசு: 


2017ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி மொஹாலி மைதானத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது, ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து அசத்தினார். இலங்கைக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 208 ரன்கள் எடுத்த பிறகு, ரோஹித் சர்மா இந்த இன்னிங்ஸை தனது மனைவியான ரித்திகா சஜ்தேவுக்கு அர்ப்பணித்தார். 









இரட்டை சதத்திற்கு பிறகு பேசிய ரோஹித் சர்மா, “இந்த இன்னிங்ஸ் மிகவும் சிறப்பு வாய்ந்தது, இதை எனது மனைவிக்கு முதலாம் ஆண்டு திருமண பரிசாக அளிக்கிறேன்” என்று கூறினார். ”இது தனக்கு சிறந்த பரிசு” என்று ரித்திகாவும் தெரிவித்தார். 


2018 டிசம்பரில் தந்தையான ரோஹித் சர்மா: 


ரோகித் ஷர்மா அடுத்த ஆண்டு, அதாவது 2018 ஆம் ஆண்டில் தந்தையானார். ரித்திகா சஜ்தே தனது மகள் சமைராவை டிசம்பர் மாதமே பெற்றெடுத்தார். டிசம்பர் 30ஆம் தேதி சமைராவுக்கு 5 வயது நிறைவடைகிறது. இருப்பினும், அந்த நேரத்தில் ரோஹித் சர்மா தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.


தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. ஆனால் டெஸ்ட் தொடரில் கேப்டனாக மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப உள்ளார். ரோஹித் சர்மா - ரித்திகா திருமண நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் வேகமாக ட்ரெண்டாகி வருகிறார்கள். அவர்கள் இருவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.