இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி போராடி டிரா செய்தது. அந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர்.
இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு செயல்பாடு தொடர்பாக பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்றை பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “கான்பூர் போட்டியின் ஆடுகளத்தை பார்த்தவுடன் எங்களுக்கு தெரிந்தது. இதில் பந்துவீச்சாளர் சற்று கடினமாக உழைத்து தான் விக்கெட்களை எடுக்கவேண்டும் என்று நாங்கள் நன்றாக தெரிந்து வைத்திருந்தோம். அப்படிப்பட்ட ஆடுகளத்தில் நம்முடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர்.
குறிப்பாக இந்த ஆடுகளத்தில் 19 விக்கெட் வீழ்த்தி இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். டெஸ்ட் போட்டியின் சிறப்பே இது தான். கடைசி நாள் வரை ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. ஒன்று இரண்டு வாய்ப்புகள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. அப்படி அமைந்திருந்தால் இந்த போட்டியை நாம் நிச்சயம் வென்று இருப்போம்” எனக் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு பராஸ் மாம்ப்ரே புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பாக டி20 உலகக் கோப்பை வரை முன்னாள் தமிழ்நாடு வீரர் பரத் அருண் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தார். அவருக்கு பிறகு தற்போது மாம்ப்ரே இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக அவருக்கு இது முதல் போட்டி என்பதால் அவருடைய செயல்பாடுகள் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
இதனிடைய மும்பை நகரில் பெய்து வரும் மழை காரணமாக இந்திய அணியின் பயிற்சி ரத்தாகியுள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கு இந்திய கேப்டன் விராட் கோலி அணிக்கு திரும்புகிறார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க:“எல்லா நாளும் கார்த்திகை... லா...ல...லா...” - சிஎஸ்கேவுக்கு டு ப்ளெசி, பிராவோ வாழ்த்து