வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் 2 தோல்விகளுடன் தொடரை இழந்த இந்திய அணி, ஆறுதல் வெற்றிபெறும் முனைப்பில் இன்று களமிறங்கியது. முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 210 ரன்களும், விராட் கோலி 113 ரன்களும் எடுத்திருந்தனர். 


வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதமடித்தார். 85 பந்துகளில் 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உதவியுடன் 103 ரன்கள் விளாசி, 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது 44வது சதத்தை பதிவு செய்தார். ஒட்டுமொத்தமாக இது இவருக்கு 72வது சதமாகும். 


கடைசியாக 2019 ஆகஸ்ட் 14ம் தேதி மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக விராட் கோலி சதமடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 182 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 


182 ரன்களுக்குள் ஆல் அவுட்:


410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக அனாமுல் ஹக் மற்றும் கேப்டன் லிட்டன் தாஸ் களமிறங்கினர். வங்கதேச அணி 33 ரன்கள் எடுத்திருந்தபோது 8 ரன்கள் அடித்திருந்த அனாமுல் ஹக், அக்சார் வீசிய 5 வது ஓவரில் சிராஜிடம் கேட்சானார். தொடர்ந்து, கேப்டன் லிட்டன் தாஸ் 29 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த முஷ்பிகுர் ரஹீமும் 7 ரன்களில் நடையைக்கட்டினார். 






அனுபவ வீரர் ஷகிப் அல் ஹாசன் வழக்கம்போல் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். மறுபுறம் வங்கதேச அணியின் விக்கெட்கள் மளமளவென சரிந்தாலும், ஷகிப் அல் ஹாசன் தனது பாணியில் நிதானமாக ஆடி 50 பந்துகளில் 43 ரன்கள் குவித்து குல்தீப் யாதவ் வீசிய 23 வது ஓவரில் க்ளீன் போல்டானார். 


அடுத்து களமிறங்கிய யாசிஷ் அலி அதிகபட்சமாக 25 ரன்களும், மஹ்முதுல்லாஹ் 20 ரன்களும் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து, உள்ளே வந்த பின்வரிசை வீரர்கள் தங்கள் விக்கெட்டை பறிகொடுக்க 182 ரன்களுக்குள் வங்கதேச அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது.