ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் தம்புல்லாவில் உள்ள ரங்கிரி தம்புல்லா சர்வதேச மைதானத்தில் ஜூன் 27 ம் தேதி மோதியது. டி20 தொடரை வென்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 


இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய மகளிர் அணி இன்று களமிறங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து,  இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா களமிறங்கினர். எப்பொழுதும் அதிரடியாக விளையாடும் ஷஃபாலி வர்மா தொடக்கத்திலேயே 5 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளிக்க, அடுத்து வந்த சப்பினேனி மேகனா, ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்தார். 


இருவரும் இணைந்து ஓரளவு தாக்குபிடித்து ஆட, இந்திய அணியின் எண்ணிக்கை 45 ரன்களை கடந்தது. 21 பந்துகளில் 22 ரன்கள் அடித்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்மிருதி மந்தனா, ரணவீரா பந்துவீச்சில் அவுட்டாகினார். இவரை தொடர்ந்து சப்பினேனி மேகனாவும் 22 ரன்களில் நடையைகட்ட, இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருடன் ரோட்ரிக்ஸ் இந்திய அணி 100 ரன்களை கடக்க உதவி செய்தனர். 


ரோட்ரிக்ஸ் 33 ரன்களில் அவுட் ஆக, ஹர்மன்ப்ரீத் மற்றும் பூஜா வஸ்த்ரகர் இறுதியில் அதிரடியாக விளையாடினர். 20 ஒவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. 


139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீராங்கனைகளாக விஷ்மி குணரத்ன மற்றும் கேப்டன் சாமரி அதபத் களமிறங்கினர். தொடக்கத்திலேயே விஷ்மி குணரத்ன 5 ரன்களில் வெளியேறினாலும், கேப்டன் சாமரி அதபத் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். 


பின்னால் களமிறங்கிய ஹர்ஷிதா மாதவி 13 ரன்களிலும், நிலாக்ஷி டி சில்வா 30 ரன்களிலும் அவுட்டானார். மறுமுனையில் கேப்டன் சாமரி அரைசதம் அடித்து அசத்த, கவிஷா தில்ஹாரி 7 ரன்கள் அடித்து உறுதுணையாக இருந்தார். 




17 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் அடித்து இலங்கை அணி வெற்றி பெற்றது. இறுதிவரை கேப்டன் சாமரி அதபத் 80 ரன்களுடனும், கவிஷா தில்ஹாரி 7 ரன்களுடனும் அவுட்டாகமல் களத்தில் இருந்தனர். இருப்பினும் ஏற்கனவே 2 வெற்றிகளை பெற்ற இந்திய அணி 2- 1 என்ற கணக்கில் கோப்பையை தட்டித்தூக்கியது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண