IND-W vs SA-W Test: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. இன்று, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 575 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவ்வின் முந்தைய சாதனையை முறியடித்து, மகளிர் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இந்த சாதனையை நிகழ்த்திய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுக்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷபாலி வர்மாவின் இரட்டை சதத்தாலும், ஸ்மிருதி மந்தனாவின் 149 ரன்களாலும் சிறப்பான தொடக்கம் கிடைத்தது. இதன் மூலம் இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. 

ஸ்மிருதி மந்தனா 161 பந்துகளில் 27 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 149 ரன்களில் அவுட்டானார். இதுபோக, ஷஃபாலி வர்மா 197 பந்துகளில் 23 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உதவியுடன் 205 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்மிருதி மற்றும் ஷஃபாலி தவிர, ரிச்சா கோஷ் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோரும் அரைசதங்கள் அடித்திருந்தனர். மேலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 94 பந்துகளில்  8 பவுண்டரிகள் உதவியுடன் 55 ரன்கள் எடுத்திருந்தார். 

இதன் காரணமாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இது மகளிர் டெஸ்ட் வரலாற்றில் அதிகபட்ச ரன்னாக பதிவானது. 

இதற்கு முன், ஆஸ்திரேலிய மகளிர், மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஸ்கோரை அடித்த சாதனையை படைத்தனர். 2024 இல் பெர்த்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 575/9 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தனர். 

மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்: 

எண்

ஆண்டு

அணிகள்

எதிரணி

இடம்

அதிகபட்ச ஸ்கோர்

1

2024

இந்திய மகளிர்

தென்னாப்பிரிக்கா மகளிர்

சென்னை

603/6d

2

2024

ஆஸ்திரேலியா மகளிர்

தென்னாப்பிரிக்கா மகளிர்

பெர்த்

575/9d

3

1998

ஆஸ்திரேலியா மகளிர்

தென்னாப்பிரிக்கா மகளிர்

கில்ட்ஃபோர்ட்

569/6d

4

1984

ஆஸ்திரேலியா மகளிர்

இந்திய மகளிர்

அகமதாபாத்

525/10

5

1996

நியூசிலாந்து மகளிர்

இங்கிலாந்து மகளிர்

ஸ்கார்பரோ

517/8

6

1935

இங்கிலாந்து மகளிர்

நியூசிலாந்து மகளிர்

கிறிஸ்ட்சர்ச்

503/5டி

7

2003

இங்கிலாந்து மகளிர்

தென்னாப்பிரிக்கா மகளிர்

ஷென்லி

497/10

8

2023

ஆஸ்திரேலியா மகளிர்

இங்கிலாந்து மகளிர்

நாட்டிங்ஹாம்

473/10

9

2002

இந்திய மகளிர்

இங்கிலாந்து மகளிர்

டவுன்டன்

467/10

10

2023

இங்கிலாந்து மகளிர்

ஆஸ்திரேலியா மகளிர்

நாட்டிங்ஹாம்

463/10

முன்னதாக, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான நேற்றைய முதல் நாளில் இந்திய மகளிர் அணி 4 விக்கெட்டுக்கு 525 ரன்கள் எடுத்திருந்தது. இது ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு நாளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக பதிவானது. இதற்கு முன்னதாக, கடந்த 2002ம் ஆண்டு கொழும்பில் வங்கதேசத்திற்கு எதிராக ஒரு நாளில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 509 ரன்கள் எடுத்திருந்தது.