இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய பவுலர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்த போட்டியில் வென்று, டி20 தொடரில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
வெறும் 118 ரன்களை இலக்காக நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது டி20 போட்டி, இமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன் டீகாக் மற்றும் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் களமிறங்கினர். ஆனால், டீகாக் ஒரு ரன்னிலும், ஹென்ட்ரிக்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.
இதைத் தொடர்ந்து, எய்டன் மார்க்ரம் மற்றும் பிரெவிஸ் களத்திற்கு வந்த நிலையில், ஒரு முனையில் மார்க்கம் நின்று ஆட, பிரெவிஸ் 2 ரன்னில் வெளியேறினார். அவரைத் தொடர்நது வந்த 3 வீரர்களும் அடுத்தடுத்து குறைந்த ரன்களில் வெளியேறினர்.
பின்னர், மார்க்ரம்முடன் ஃபெரைரா சற்று நின்று ஆடிய நிலையில், 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவரும் வெளியேறினார். இதைத் தொடர்ந்து வந்த ஜேன்சன் 2 ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து அரை சதத்தை பூர்த்தி செய்து 61 ரன்களில் ஆடிவந்த மார்க்ரமும் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த நார்ட்ஜே 12 ரன்களிலும், கடைசி பந்தில் பார்ட்மேன் 1 ரன்னிலும் வெளியேற, 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களை எடுத்து, இந்தியாவிற்கு 118 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இந்திய அணி தரப்பில், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
இதைத் தொடர்ந்து, 118 ரன்கள் இலக்குடன், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். அபிஷேக் சர்மா வழக்கம் போல் அதிரடி காட்டிய நிலையில், 18 பந்துகளில் 3 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து, சுப்மன் கில்லுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடிய நிலையில், 28 பந்துகளில் 28 ரன்களை எடுத்திருந்த நிலையில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, திலக் வர்மாவுடன் அணியின் கேப்டன் சூர்யகுமார் ஜோடி சேர்ந்தார். அவர் அதிடி காட்டத் தொடங்கிய நிலையில், எதிர்பாராமல் 12 ஆட்டமிழந்தார்.
அப்போது, இந்திய அணி வெற்றி பெற 9 ரன்களே இருந்த நிலையில், திலக் வர்மாவுடன் சிவம் தூபே இணைந்தார். இறுதியில் அவரது அதிரடியுடன், 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ரன்களை எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. திலக் வர்மா 26 ரன்களுடனும், தூபே 10 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில், கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்திலும், நியூ சண்டிகரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இந்நிலையில், 3-வது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது.