19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 


19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதின. இங்கிலாந்துக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே இங்கிலாந்து விக்கெட்டை பறிகொடுத்தது.


சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியினர் சரியான இடைவெளியில் விக்கெட்டுகளை தொடர்ந்து கைப்பற்றினர். 17ஆவது ஓவரில், 68 ரன்கள் எடுத்திருக்கையில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து ஆல் அவுட்டானது.


இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், சவுமியா திவாரி மற்றும் கொங்காடி திரிஷாவின் பொறுப்பான ஆட்டத்தால் இலக்கை எளிதில் எட்டியது. 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது.


தொடர் முழுவதுமே, இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தனர். அது, இந்த போட்டியிலும் எதிரொலித்தது.


தென் ஆப்பிரிக்காவின் போட்செப்ஸ்ட்ரூமில் உள்ள மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்தது.


முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான முதல் டி-20 உலகக்கோப்பை தொடரில், 16 அணிகள் பங்கேற்றன. தென்னாப்ரிக்காவில் கடந்த 14 ஆம் தேதியில் இருந்து  நடைபெற்ற இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியது.


முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வென்று இங்கிலாந்தும், நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.


அரையிறுதி போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை வெறும் 96 ரன்களுக்கு இங்கிலாந்து அணி சுருட்டி இருந்தது. ஹன்னா பேக்கர் நான்கு ஓவர்களில் 3/10 என்ற அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதே நேரத்தில் கேப்டன் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் 3.4 ஓவரில் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். பேட்டிங்கிலும் அந்த அணியில் தொடக்க வீராங்கனைகள் உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் இருந்தனர். 


ஆனால், இன்றைய போட்டியில், இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 


 






தொடர் முழுவதும், இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்வேதா செஹ்ராவத்தின் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் விளையாடி வந்தார். அநாவசிய தவறுகள் எதையும் செய்யாமால், அதேபோல இந்திய வீரரகள் அணியாக இணைந்து தனது திறமைகளை வெளிப்படுத்தியது.


19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான முதல் டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை கிளப்பி உள்ளது.