பெங்களூரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. பகலிரவு டெஸ்ட் போட்டியான இதில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பேட்டிங்கைத் தொடங்கிய மயங்க் அகர்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் கேப்டன் ரோகித்தும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய ஹனுமா விஹாரி 31 ரன்களிலும், கோலி 23 ரன்களில் அவுட்டானர்.




அடுத்து ஜோடி சேர்ந்த ரிஷப்பண்ட் – ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி அதிரடியாக ஆடியது. ஆனாலும், ரிஷப் பண்ட் 39 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தது. கடந்த போட்டியில் அசத்திய ஜடேஜா 4 ரன்களிலும், அஸ்வின் 13 ரன்களிலும், அக்‌ஷர் படேல் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் ஒரு முனையில் விழுந்தாலும், மறுமுனையில் தூண் போல நின்ற ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். பின்னர், அவர் சதத்தை நெருங்கிய வேளையில் கடைசி விக்கெட்டாக அவுட்டானர். அவர் 98 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 92 ரன்கள் எடுத்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.




பின்னர், தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணிக்கு பும்ராவும், ஷமியும் குடைச்சல் கொடுத்தனர். தொடக்க வீரர் குசல் மெண்டிஸ் 2 ரன்களிலும், முக்கிய வீரர் திரிமன்னே 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரத்தில் கருணரத்னேவும் 4 ரன்களில் ஷமி பந்தில் போல்டானார். பின்னர், 4வது விக்கெட்டிற்கு இறங்கிய அனுபவ வீரர் மேத்யூஸ் மட்டும் அணியை மீட்கும் விதத்தில் ஆடினார். ஆனாலும், மறுமுனையில் அவருக்கு சிறந்த ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.




தனஞ்செய டி சில்வா 24 பந்தில் 10 ரன்களுடனும், கடந்த டெஸ்டில் அசத்திய அசலங்கா 5 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். போட்டி முடிவடைய சிறிது நேரம் இருந்தபோது சிறப்பாக ஆடி வந்த மேத்யூசும் பும்ரா பந்தில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 85 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 30 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும், அக்‌ஷர் படேல் 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். இலங்கை அணி இந்திய அணியை விட 166 ரன்கள் பின்தங்கியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண