ஜோஹன்னஸ்பர்க் நகரில் அமைந்துள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து ஆடி வருகிறது.


அதிரடி காட்டும் இந்திய அணி:


சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகளில் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் வென்றது. மூன்றாவது போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. 


மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரை கைப்பற்ற போவது யார்? என்பதை தீர்மானிக்கும் 4ஆவது டி20 போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறுகிறது. ஜோஹன்னஸ்பர்க் நகரில் அமைந்துள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் 4ஆவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது.


இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, சஞ்சு சாம்சனும் அபிஷேக் சர்மாவும் இந்திய அணிக்காக தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடினர்.


சஞ்சு சாம்சன் மிரட்டல்:


சிக்ஸர்கள், ஃபோர்களாக பறக்கவிட்ட அபிஷேக் சர்மா, 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தபோது லுதோ சிபம்லா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன், 31 பந்துகளில் 65 ரன்களை எடுத்துள்ளார். 10.2 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது. 


பந்துவீச்சைப் பொறுத்தவரை இந்திய அணியில் அர்ஷ்தீப்சிங் கட்டுக்கோப்பாக வீச வேண்டியது அவசியம் ஆகும். ஆவேஷ்கான், ஹர்திக் பாண்ட்யா விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டியது அவசியமாகிறது.


கடந்த போட்டியில் சுழலில் அசத்திய வருண் சக்கரவர்த்தி, பிஷ்னோய் இந்த போட்டியிலும் சுழலில் அசத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஐபிஎல் ஏலம் நெருங்கும் வேளையில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டவே விரும்புவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதையும் படிக்க: TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு