தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ (Tamil Nadu Public Service Commission) தனது தேர்வர்களுக்குப் புதிதாக டெலிகிராம் சேனலைத் (Telegram Channel) தொடங்கி உள்ளது. 


தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலி இடங்கள் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. தேர்வர்கள் போட்டித் தேர்வுகளுக்கு ஆண்டுக்கணக்கில் படித்துத் தயாராகி, தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்று அரசு ஊழியர்கள் ஆகின்றனர்.


தனியார் தளங்கள் அளிக்கும் விவரங்கள்


அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி சொல்லும் அறிவிப்புகளையும் வெளியிடும் அறிவிக்கைகளையும் காண்பதற்காக ஏராளமானோர் காத்திருப்பர். அவர்களுக்கெல்லாம் டிஎன்பிஎஸ்சி ஜாப் அலர்ட், டிஎன்பிஎஸ்சி ஜாப்ஸ் உள்ளிட்ட தனியார் தளங்கள் விவரங்களை வெளியிட்டு வந்தன.


இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு, டிஎன்பிஎஸ்சி எக்ஸ் பக்கத்தில் தனக்கென அதிகாரப்பூர்வக் கணக்கைத் தொடங்கியது. அதில் குரூப் 2 தேர்வு, குரூப் 4 தேர்வு அறிவிப்பு, தேர்வு முடிவுகள் அறிவிப்பு, காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு, சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வந்தன.




அதிகாரப்பூர்வ டெலிகிராம்‌ சேனல்‌ தொடக்கம்


இந்த நிலையில், போட்டித் தேர்வர்கள்‌ தேர்வுகள்‌ தொடர்பான செய்திகள்‌ மற்றும்‌ தகவல்களை உடனுக்குடன்‌ தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ டெலிகிராம்‌ சேனல்‌ தொடங்கப்பட்டுள்ளது.






இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட்டில், தேர்வர்கள்‌ தேர்வுகள்‌ தொடர்பான செய்திகள்‌ மற்றும்‌ தகவல்களை உடனுக்குடன்‌ தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ டெலிகிராம்‌ சேனல்‌ ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


டெலிகிராம் சேனலில் சேர்வது எப்படி?


தேர்வர்கள்  https://t.me/TNPSC_Office என்ற இணைப்பை க்ளிக் செய்து, சேனலில் இணையலாம். 


கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/