உலகக் கோப்பை கிரிக்கெட் (ICC Cricket World Cup 2023) போட்டித் தொடர் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தியா பாகிஸ்தான் போட்டி இன்று அதாவது அக்டோபர் 14ஆம் தேதி மோதிக் கொண்டது. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் இந்தியா அணி தரப்பில் இஷான் கிஷன் வெளியேற்றப்பட்டு சுப்மன் கில் சேர்க்கப்பட்டார். 


டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக விளையாடி வந்த பாகிஸ்தான் அணி தனது 3வது விக்கெட்டினை 155 ரன்களில் இருந்தபோது இழந்தது. அதன் பின்னர் பாகிஸ்தான் அணி தனது 7 விக்கெட்டுகளை அடுத்த 36 ரன்கள் சேர்ப்பதற்குள் மளமளவென இழந்தது. இந்திய அணி சார்பில் பந்து வீசிய பும்ரா, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.


192 ரன்கள் சேர்த்தால் இந்த தொடரில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் என்ற நிலையில் இந்திய அணி களமிறங்கியது.  இந்திய அணி தனது இன்னிங்ஸினை பவுண்டரியுடன் தொடங்கியது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அஃப்ரிடி வீசிய முதல் பந்தினை ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்டினார். அதே ஓவரில் தனது முதல் பந்தினை எதிர்கொண்ட மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லும் பவுண்டரி விளாசினார். போட்டியின் மூன்றாவது ஓவரில் கில் 16 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழக்க, அதன் பின்னர் விராட் களத்திற்கு வந்தார். 


விராட் மற்றும் ரோகித் இறுதிவரை களத்தில் இருந்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்ற நோக்கில் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருந்தபோது விராட் கோலி ஹசன் அலி பந்து வீச்சில் 16 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 


சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி சிக்ஸர் மழை பொழிந்து வந்த கேப்டன் ரோகித் சர்மா 36 பந்துகளில் அரைசதம் விளாசினார். விராட் கோலி வெளியேறிய பின்னர் வந்த ஸ்ரேயஸ் ரோகித்துடன் இணைந்து பொறுப்பாக ரன்கள் சேர்க்க இந்திய அணி வெற்றியை எளிதாக நெருங்கியது. பாகிஸ்தான் அணி தரப்பில் விக்கெட் கைப்பற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் இவர்கள் முன்பு தவிடுபொடியானது. 


ஒரு கட்டத்தில் இருவரும் மாறி மாறி சிக்ஸர்கள் விளாச பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு நம்பிக்கை சிதைந்தது. இந்தியா தரப்பில் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 63 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்ஸர்கள் விளாசி 86 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இதனால் இந்திய ரசிகர்கள் மனம் நொருங்கியது என்றே கூறவேண்டும் எனும் அளவிற்கு நரேந்திர மோடி மைதானமே ஒரு கணம் நிசப்தத்தில் மூழ்கியது. 


ரோகித் வெளியேறிய பின்னர் வந்த கே.எல். ராகுல் ஸ்ரேயஸ் ஐயரும் இணைந்து, மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டனர். இறுதியில் இந்திய அணி 30.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்ட 8 போட்டிகளிலும் வென்று தனது வெற்றிச் சரித்திரத்தை தொடர்ந்துள்ளது.