ஆசிய கோப்பை 2025 தொடரின் முக்கிய ஆட்டமாகக் கருதப்படும் இந்தியா-பாகிஸ்தான் மோதல், நாளை (செப்டம்பர் 14) ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்த மோதல், வழக்கமாக இரு நாட்டிலும், உற்சாகத்தை ஏற்படுத்தும். சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து, மக்கள் தங்கள் வேலைகளை ஒத்திவைத்து, தொலைக்காட்சி முன் கூடும் நிலை வழக்கமாக காணப்படும். ஆனால் இந்த முறை நிலைமை முற்றிலும் மாறுபட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் ஆட்டங்களில் எப்போதும் காணப்படும் “கிரிக்கெட் ஃபீவர்” இந்த முறை காணப்படவில்லை.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல் மோதல்
சமீபத்தில் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மைதானத்தில் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறை. இந்த தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்குமிடையேயான பதட்டம் அதிகரித்த நிலையில், இந்தப் போட்டி இயல்பாகவே மிகுந்த கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான முன்னோட்டமாகவும் இந்த மோதல் முக்கியத்துவம் பெறுகிறது. எனினும், பல மாதங்களுக்குப் பிறகு நடைபெறும் இந்த மோதலிலும் ரசிகர்கள் மத்தியில் வழக்கம்போன்ற பரபரப்பு இல்லை.
டிக்கெட் விற்பனையில் மந்தம்
இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே ஹவுஸ்ஃபுல் தான் என்ற புகழ் உண்டு. ஆனால் இந்த முறை ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் இன்னும் விற்பனையாகாமல் கிடப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய அணியின் பயிற்சியைப் பார்க்க கூட ரசிகர்கள் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வழக்கமாக பயிற்சி அமர்வுகளுக்குக் கூட நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் கூடும் நிலையில், இம்முறை வெறிச்சோடியது. இந்தியா-பாகிஸ்தான் மோதல் ஹவுஸ்ஃபுல் ஆகாமல் போனது இதுவே முதல் முறை என்பது கிரிக்கெட் வரலாற்றில் விசேஷமாக கருதப்படுகிறது.
புறக்கணிப்பு கோரிக்கைகள் சமூக ஊடகங்களில் பரவி
சமூக ஊடகங்களில், இந்தியா இந்த ஆட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு வடிவங்களில் எழுந்துள்ளன. இதனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்துக்குப் பிசிசிஐ அதிகாரிகள் வருவார்களா என்பது கூட சந்தேகமாகியுள்ளது. ஏனெனில், வழக்கமாக இந்தியா-பாகிஸ்தான் ஆட்டங்களில் பிசிசிஐ மற்றும் அரசு அதிகாரிகள் பெரும் அளவில் மைதானத்தில் பங்கேற்பர். இம்முறை அந்த வருகை கூட குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் கொள்கை தொடர்கிறது
இந்திய அரசு பன்னாட்டு தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக தேசிய அணி விளையாட அனுமதி அளித்துள்ள போதிலும், இருதரப்பு தொடர்களில் மட்டும் பாகிஸ்தானுடன் ஆட்டம் நடத்த வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் தொடர்கிறது. இந்தப் போட்டியும் அதே சூழலில் இடம்பெறுவதால், கிரிக்கெட் அரசியலின் நிழலில் நடைபெறும் மோதலாகவே மாறியுள்ளது.