இந்தியா - பாகிஸ்தான் இடையிலான எதிர்பார்க்கப்பட்ட ஆசியக் கோப்பை போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். 


இந்தநிலையில், இந்த போட்டிக்கு முன்னதாக விராட் கோலி பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹரிஸ் ரவுப்பை சந்தித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விராட் கோலி ஹாரிஸ் ரவுப்பை நோக்கி மகிழ்ச்சியுடன் நடந்து சென்று, கைகுலுக்கி கட்டிபிடித்து ஆர தழுவினார். 






டி20 உலகக் கோப்பை 2022 போட்டியின்போது விராட் கோலி இந்திய அணியின் வெற்றிக்காக ஒரு அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். அப்போது, இதே வேகப்பந்துவீச்சாளர் ஹரிஸ் ரவுப் பந்தில்தான் விராட் கோலி அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை அடித்து நொறுக்கினார். 83 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி, இந்திய அணியை வெற்றிபெற செய்தார். 






இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி என்றாலே இருநாட்டு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அடித்து கொள்வார்கள். ஆனால், மைதானத்திலும் சரி, மைதானத்திற்கு வெளியேயும் சரி இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் ஒருவருக்கொருவர் அன்புடனே இருக்கின்றனர். அதற்கு சாட்சியே இதுமாதிரியான வீடியோக்கள்தான். 


முன்னதாக, விராட் கோலி பாகிஸ்தான் வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து சில அறிவுரைகளை வழங்கிய வீடியோவும் வெளியானது. 






விளையாடும் இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்


விளையாடும் பாகிஸ்தான் அணி: ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்