ஆசிய கோப்பைத் தொடரில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி தொடங்கியுள்ளது. மழை காரணமாக போட்டி நடக்குமா? என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில் வானிலை போட்டிக்கு சாதகமாக இருப்பதால் திட்டமிட்டபடி டாஸ் போடப்பட்டது.
டாஸ் வென்ற ரோகித்:
இந்திய கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். டாஸ் தோல்வியடைந்த பாபர் அசாமும் `பேட்டிங்கையே தேர்வு செய்யவே விரும்பியதாகவும், டாஸ் தோற்றதால் அது முடியவில்லை என்று கூறினார்.
இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இந்த போட்டி இடையில் மழை பெய்ய வாய்ப்பு அதிகளவில் இருப்பதால் முதலில் பேட் செய்யும் இந்தியா அதிரடியாகவே ஆடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ரோகித் படை - பாபர் படை:
ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணியில் சுப்மன்கில், இஷான்கிஷான், விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ் களமிறங்கியுள்ளனர். பாகிஸ்தான் அணியில் நேபாள அணிக்கு எதிராக களமிறங்கிய அதே அணியான பாபர் அசாம், பக்கர் ஜமான், இமாம் உல் ஹக், முகமது ரிஸ்வான், அகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப்கான், முகமது நவாஸ், ஷாகின் அப்ரீடி, நசீம்ஷா, ஹாரிஸ் ராஃப் களமிறங்குகின்றனர்.
கடந்த 2 நாட்களாக வானிலை மந்தமாக இருந்ததால் பேட்டிங்கிற்கு சாதகமாக மைதானம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பாபர் அசாம், ரோகித் இருவருமே பேட்டிங் செய்ய விரும்பினர்.
ரசிகர்கள் ஆர்வம்
இரு அணியை பொறுத்தவரையில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் மிரட்டலாக இருப்பதால் இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தொடக்க வீரராக ரோகித்சர்மாவுடன் இஷான்கிஷன் தொடங்குவாரா? அல்லது சுப்மன்கில் தொடங்குவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளே இருப்பதால் சூர்யகுமார் யாதவ் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்துள்ள ஸ்ரேயாஸ் பேட்டிங்கில் ஜொலிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, பாகிஸ்தான் அணியினரும் பும்ராவின் பந்துவீச்சை எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றனர்.
இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் ஆடுவதாலும், மழை பெய்வதற்கு வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாலும் ஆட்டம் திக்..திக்.. ஆகவே செல்லும் என்றே எதிர்பார்க்கலாம்.