இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணி ஸ்ரேயாஸ் சதம், சுப்மன்கில் மற்றும் ஜடேஜா அரைசதங்கள் உதவியுடன் 345 ரன்களை குவித்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 129 ரன்களை எடுத்திருந்தது.


இந்த நிலையில், ஆட்டத்தின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. நியூசிலாந்திற்கு எதிராக அஸ்வின் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கையில் ரஹானே தொடர்ந்து அஸ்வினுக்கே ஓவர்களை வாரி வழங்கினார். அவரது நம்பிக்கைக்கு பலன் கிடைத்தது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் நியூசிலாந்து தனது முதல் விக்கெட்டை இழந்தது.




இந்திய அணிக்கு குடைச்சல் அளித்து வந்த வில் யங், அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 151 ஆக உயர்ந்தபோது 214 பந்தில் 15 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்திருந்த வில்யங் விருத்திமான் சஹாவிற்கு பதில் கீப்பிங் செய்த ஸ்ரீகர் பரத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, அபாயகரமான நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார்.


களமிறங்கியது முதல் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ரன்களை சேர்க்க மிகவும் தடுமாறினார். இருப்பினும் மறுமுனையில் அரைசதத்தை கடந்து டாம் லாதம் மிகவும் சிறப்பாக ஆடி வந்தார். அணியின் ஸ்கோர் 197 ரன்களை எட்டியபோது, டேஞ்சர் பேட்ஸ்மேன் வில்லியம்சன் 64 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்களை எடுத்த நிலையில் உமேஷ்யாதவ் ஆட்டமிழந்தார். சற்றுமுன் உணவு இடைவேளையின்போது நியூசிலாந்து அணி 85.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை எடுத்து ஆடி வருகிறது. சற்றுமுன்வரை 2 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை எடுத்து ஆடி வருகிறது. தற்போது டாம் லாதமுடன் நியூசிலாந்தின் மூத்த வீரர் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்து ஆடி வருகிறார். 




இந்திய அணியில் அஸ்வின் 28 ஓவர்கள் வீசி 7 ஓவர்கள் மெய்டனாக வீசி 57 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். உமேஷ் யாதவ் 11.3 ஓவர்கள் வீசி 30 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.  இந்திய பந்துவீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல் ஆகியோர் மாறி, மாறி பந்துவீசி வருகின்றனர். ஆனால், இதுவரை அவர்களுக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. இந்திய பந்துவீச்சுக்கு எதிராக நியூசிலாந்தின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி வருவதால், இந்திய வீரர்கள் விரைவாக விக்கெட் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண