IND vs NZ Final: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்த, இந்தியா கட்டாயம் சில விதிகளை பின்பற்ற வேண்டும்.


ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல்


ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. 2:00 மணிக்கு டாஸ் போடப்படும். போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். நடப்பு சாம்பியன்ஸ் ட்ராபியில் தோல்வியே சந்திக்காத இந்திய அணிக்கு, கடும் சவால் அளிக்கும் அணியாக நியூசிலாந்து திகழ்கிறது. இதனால், கோப்பையில் வெல்ல இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே, இறுதிப்போட்டியில் வெற்றி பெற இந்தியா கட்டாயம் பின்பற்றவேண்டிய திட்டங்கள் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளன.



கட்டாயம் பின்பற்ற வேண்டியவை


1. பேட்டிங்கோ..! பவுலிங்கோ..! - தொடக்கம் முக்கியம்


இந்திய அணி கடைசியாக விளையாடிய 14 போட்டிகளிலும் இந்திய அணி டாஸில் தோல்வியையே சந்தித்துள்ளது. இன்றும் கூட அது தொடரலாம். ஆனால், முதலில் பேட்டிங் வந்தாலும் சரி, பந்துவீச்சு வந்தாலும் சரி வலுவான தொடக்கம் அணிக்கு மிகவும் முக்கியம்.  50 ஓவர் ஆட்டங்களை முதல் 10 ஓவர்களில் வெல்ல முடியாது, ஆனால் அந்த தொடக்கம் போட்டியின் முடிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.  எனவே உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு நல்ல தொடக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்.


2. ரோகித்திடம் இருந்து ரன்கள்


அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் போன ரோகித் சர்மா, கடந்த இரண்டு ஆண்டுகளாக அணிக்கான வலுவான தொடக்கத்திற்காக பெரிய ஸ்கோர்களை தியாகம் செய்து வருகிறார். இது பலன் அளித்தாலும், கடைசி 20 இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் மற்றும் ஐந்து அரைசதங்களை மட்டுமே அடித்துள்ளார். 110 பவுண்டரிகள் மற்றும் 49 சிக்ஸர்களால் 126.45 என்ற வெறித்தனமான ஸ்ட்ரைக்-ரேட்டில் 980 ரன்கள் வந்துள்ளன. இறுதிப்போட்டியை கருத்தில் கொண்டு ரோகித் தனது ஆக்ரோஷமான அணுகுமுறையை முழுவதுமாக கைவிட்டு, குறைந்தபட்சம் 25 ஓவர்கள் பேட்டிங் செய்ய முடிந்தால் அணிக்கு சாதகமான முடிவை எட்டலாம்.


3. கோலியின் வேட்டை தொடரட்டும்


சாம்பியன்ஸ் ட்ராபியில் சரியான நேரத்தில் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் முறையே 100 மற்றும் 84 ரன்களை விளாசி அசத்தினார். இந்த போட்டியிலும் அந்த ஃபார்மை தொடர்ந்து, ரன்களை குவிக்க வேண்டும்.


4. உயிரை கொடுத்து ஓட வேண்டும்


நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கில் வலுவாக செயல்பட்டு எதிரணிகள் சிங்கிள்ஸ் எடுப்பதை கடுமையாக தடுத்து வருகிறது. ஆனால், போட்டியின் மிடில் ஓவர்களில் அதிக டாட்பால்களை வாங்குவது இந்திய அணிக்கு பாதகமாக அமையலாம். எனவே சிங்கில்ஸ்களுக்காக  இந்திய வீரர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். ஸ்ட்ரைக் ரொடேட் செய்வது நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு வியூகத்தை உடைக்க உதவும்.


5. புதிய பந்திலேயே விக்கெட்


நடப்பு சம்பியன்ஸ் ட்ராபியில் இந்திய அணியின் பிரதான பலமாக சுழற்பந்துவீச்சு உள்ளது. துபாய் மைதானமும் அதற்கு நன்கு ஒத்துழைத்துள்ளது. ஆனால், முகமது ஷமி அபாரமாக பந்துவீசி விக்கெட் வேட்டை நடத்தி வருகிறார். அதேபாணியில் இன்றும் நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரரான ரச்சின் ரவீந்திராவை ஆரம்பத்திலேயே அவுட்டாக்க வேண்டியது அவசியம். இந்த தொடரில் ஏற்கனவே அவர் இரண்டு சதம் விளாசி இருப்பது குறிப்பிடத்தக்கது.


6. கேன் வில்லியம்சன் எனும் போராளி


நியூசிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேன் ஆன முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கக் கூடும். லீக் சுற்றில் கூட ரோகித் அணிக்கு நெருக்கடி கொடுத்தார். இன்றைய போட்டியில் அவரை நீண்ட நேரம் நிலைக்கச் செய்தால், பின்கள வீரர்கள் அதிரடியாக விளையாட அடித்தளம் அமைக்க வாய்ப்புள்ளது. எனவே அவரை விரைந்து வீழ்த்த வேண்டியது அவசியம்.


7. கேட்ச்களை தவறவிடமால் பிடிப்பது அவசியம்


நடப்பு சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் அதிக கேட்ச்களை விட்ட அணிகளின் பட்டியலில் இந்தியா முதல் மூன்று இடங்களில் உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதியில் கூட, ஸ்மித் மற்றும் ஹெட் கொடுத்த வாய்ப்புகளை தவறவிட்டனர். ஆனால், இன்றைய இறுதிப்போட்டியில் வெல்ல கேட்ச்களை தவறவிடமல் பிடிப்பது அவசியம். குறிப்பாக அரைவாய்ப்புகளை கூட கேட்ச்களாக மாற்ற முயல வேண்டும்.


நடப்பு சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா விளையாடிய நான்கு ஆட்டங்களில், 3 ஆட்டங்களில் சேஸ் செய்து வென்றுள்ளது. அதேநேரம், ஒரே ஒரு ஆட்டத்தில் குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.