இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் திடீரென சேர்க்கப்பட்டதற்கான காரணம் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் விளக்கம் அளித்திருக்கிறார்.


இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்:


நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியுடன் நியூசிலாந்து அணி விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ) மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது.


இதற்கான வலைபயிற்சியில் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் திடீரென சேர்க்கப்பட்டதற்கான காரணம் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் விளக்கம் அளித்திருக்கிறார்.


வாஷிங்டன் சுந்தர் களம் இறங்குவாரா?


இது தொடர்பாக அவர் பேசுகையில்,"நியூசிலாந்து அணியில் பிளேயிங் லெவலில் மூன்று அல்லது நான்கு இடதுகை வீரர்கள் இருக்கிறார்கள். எனவே எங்கள் அணியில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்தை வெளியில் எடுத்துச் செல்லும் ஸ்பின்னர் ஒருவர் இருப்பது நல்லது என உணர்ந்தோம். அவரால் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நல்ல கண்ட்ரோலில் இருக்க முடியும். இதன் காரணமாக வாஷிங்டன் சுந்தர் எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறார்.


வாஷிங்டன் சுந்தர் ஒரு தரமான வீரர் என்பது எங்களுக்கு தெரியும். மேலும் அவர் ஆட்டத்திற்கு என்ன கொண்டு வருகிறார் என்பதும் எங்களுக்கு தெரியும். நாளை அவர் விளையாடினால் நல்ல ஒரு பரிணாமத்தை கொண்டு வருவார். எங்களுக்கு நல்ல கண்ட்ரோலையும் தருவார். மேலும் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் அக்சர் படேல் மற்றும் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோரும் இருக்கிறார்கள். நாளை ஆடுகளம் எப்படி இருக்கிறது? என்பதை பொறுத்து முடிவு செய்வோம்"என்று கூறியுள்ளார் கம்பீர்.