கடந்தாண்டு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு முன்பாக இந்திய அணி லீசெஸ்டர்ஷையர் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகிறது.


இந்த போட்டியில் நேற்று டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய கேப்டன் ரோகித்சர்மா – சுப்மன்கில் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 35 ரன்கள் சேர்த்தது. சுப்மன்கில் 21 ரன்களிலும், ரோகித்சர்மா 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஹனுமா விஹாரி, 3 ரன்களிலும், ஸ்ரேயாஸ் அய்யர் டக் அவுட்டாகியும் ஏமாற்றம் அளித்தனர். ஜடேஜாவும் 13 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினார்.




பின்னர், விராட்கோலியுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரீகர்பரத் பொறுப்புடன் ஆடினர். இருவரும் நிதானமாக ஆடினர். 81 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 100 ரன்களை கடந்தது. இடையிடையே மழை குறுக்கிட்டதால் பேட்டிங் செய்வதற்கு சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் இருவரும் பொறுப்புடன் ஆடினர்.


இந்த நிலையில், விராட்கோலி 69 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷர்துல் தாக்கூர் 6 ரன்களில் அவுட்டாக 148 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து மீண்டும் தடுமாறியது. அப்போது, ஸ்ரீகர் பரத்துடன் உமேஷ்யாதவ் ஜோடி சேர்ந்தார். உமேஷ்யாதவை மறுமுனையில் வைத்துக்கொண்டு ஸ்ரீகர்பரத் மிகவும் பொறுப்புடன் ஆடினார். அவருக்கு உமேஷ்யாதவ் நல்ல ஒத்துழைப்பு அளித்தார். இதனால், 170 ரன்களுக்குள் சுருண்டு விடும் என்ற நிலையில் இருந்த இந்திய அணி 200 ரன்களை கடந்தது.






சிறப்பாக ஆடிய ஸ்ரீகர் பரத் அரைசதம் அடித்தார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்தக்கொண்டிருந்த உமேஷ்யாதவ் 32 பந்தில் 4 பவுண்டரி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய முகமது ஷமி பொறுப்புடன் ஆடினார். நேற்றைய நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 60.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களை எடுத்துள்ளது. விக்கெட் கீப்பர் ஸ்ரீகர்பரத் 111 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 70 ரன்களுடன் களத்தில் உள்ளார். முகமது ஷமி 26 பந்தில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் களத்தில் உள்ளார். லீசெஸ்டர்ஷையர் அணி ரோமன் வாக்கர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.


கடந்தாண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக களமிறங்கிய ஸ்ரீகர்பரத் அந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண