சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, உடல் தகுதி பெற்றுவிட்டதாக பிசிசிஐ-யின் பொதுச்செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். அயர்லாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் பும்ரா களமிறங்கக் கூடும் எனவும் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
காயத்தில் இருந்து மீண்ட பும்ரா:
கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உள்நாட்டில் நடந்த டி-20 தொடரின் போது, முதுகு தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளரான பும்ரா தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இதனால் ஆசிய கோப்பை தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் பும்ரா முதுகுப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தொடர்ந்து, மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர், அண்மையில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் சென்று பயிற்சி மேற்கொண்டார்.
தயாரானார் பும்ரா:
இந்நிலையில் தான் நடப்பாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள, ஒருநாள் உலகக்கோப்பை தொடர்பாக பிசிசிஐ பொதுச்செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ஷா, சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, உடல் தகுதி பெற்றுவிட்டதாக பிசிசிஐ-யின் பொதுச்செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். அயர்லாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் பும்ரா களமிறங்கக் கூடும் எனவும் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
அயர்லாந்து சுற்றுப்பயணம்:
தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி அடுத்ததாக அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த டி-20 தொடரில் ரோகித் சர்மா, கோலி உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி தேர்வு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த தொடருக்கான அணி இந்த வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 18, 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மூன்று டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த தொடரின் மூலம் தான், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜஸ்பிரித் பும்ரா சர்வதேச போட்டிகளில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் ஆசியக்கோப்பை தொடர், ஒருநாள் உலகக்கோப்பை தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என, பல்வேறு முக்கிய தொடர்களில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்நிலையில், ஜஸ்பிரித் பும்ரா சர்வதேச போட்டிகளுக்கு திரும்ப உள்ளது, இந்திய அணிக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது.
மீண்டும் பயணம்:
அயர்லாந்திற்கு பும்ரா சுற்றுப்பயணம் மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில், அவரது கட்டைவிரலில் முறிவு ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக அந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் முதல் பாதியில் அவர் விளையாடவில்லை.