இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை, பிசிசிஐ அறிவித்துள்ளது.


இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு:


5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியில், கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் 16 பேர் இடம்பெற்றுள்ளனர். நடப்பாண்டில் இந்திய அணி உள்ளூரில் விளையாடும் இந்த முதல் தொடரில், “ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில்,ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர், கேஎல் ராகுல், கேஎஸ் பாரத், துருவ் ஜூரல் , ஆர் அஷ்வின், ஆர் ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆவேஷ் கான்” ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி, ஜனவரி 25-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தொடங்க உள்ளது.






இந்திய அணி விவரம்:


உள்ளூர் தொடருக்கு மூத்த வீரர்களான புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களை சற்றே அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதோடு,  விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன இஷான் கிஷன் மீண்டும் அணியில் இடம்பெற்றவில்லை. உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஆன துருவ் ஜூரல் தேசிய அணிக்காக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இதன் மூலம்,  கேஎல் ராகுல் மற்றும் கேஎஸ் பாரத் ஆகியோருக்குப் பிறகு,  அணியின் மூன்றாவது விக்கெட் கீப்பர் ஆப்ஷனாக அவர் நீடிக்கிறார். மற்றபடி இந்திய அணியின்  பேட்டிங் யூனிட் தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணத்தின் போது இருந்ததைப் போலவே தோற்றமளிக்கிறது.


துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டுள்ளார். முகமது சிராஜ் மற்றும் முகேஷ் குமார் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். அதேநேரம், அணியில் ஷமி இல்லாதது சற்றே பின்னடைவாக கருதப்படுகிறது. உள்ளூரில் நடைபெறும் தொடரில் வெற்றி வாகை சூட இந்தியா நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்துள்ளது. அதன்படி, அஸ்வின்,  ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் உள்ளனர். முதல் 2 போட்டிகளில் வீரர்களின் செயல்பாட்டை பொருத்து, மற்ற 3 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது. அதில் ஷமி இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தொடர் விவரம்:


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதில் முதல் போட்டி வரும் ஜனவரி 25ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவர் 2ம் தேதி விசாகப்பட்டினத்திலும், 3வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ம் தேதி ராஜ்கோட்டிலும் தொடங்குகிறது. நான்காவது போட்டி பிப்ரவரி 23ம் தேதி ராஞ்சியிலும், தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவிலும் தொடங்குகிறது.