இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி வருகின்ற மார்ச் 7ம் தேதி முதல் தர்மசாலாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது,. இப்போட்டியில் எப்படியாவது வெற்றிபெற்று தொடரை 4-1 என கைப்பற்றுவதே இந்திய அணியின் இலக்காக உள்ளது. 


கோலியின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு:


தரம்சாலா டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீதுதான் அனைவரது பார்வையும் உள்ளது. இந்த போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு ரன் எடுத்தால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். தற்போது, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 655 ரன்களுடன் விராட் கோலியுடன் சமநிலையில் உள்ளார்.


தர்மசாலா டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 98 ரன்கள் எடுத்தால் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெறுவார். தற்போது இந்த சாதனை 1990ம் ஆண்டு டெஸ்ட் தொடரில் 752 ரன்கள் குவித்த இங்கிலாந்து ஜாம்பவான் கிரஹாம் கூச் பெயரில் உள்ளது. 


இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள்: 


1. கிரஹாம் கூச் (1990) - 3 போட்டிகள், 752 ரன்கள், 3 சதங்கள்
2.ஜோ ரூட் (2021-22) - 5 போட்டிகள், 737 ரன்கள், 4 சதங்கள்
3. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (2024) - 4 போட்டிகள், 655 ரன்கள், 2 சதங்கள்
4. விராட் கோலி (2016) - 5 போட்டிகள், 655 ரன்கள், 2 சதங்கள்
5. மைக்கேல் வாகன் (2002) - 4 போட்டிகள், 615 ரன்கள், 3 சதங்கள் 


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் 53 ஆண்டுகால சாதனையை முறியடிக்க யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு உள்ளது. 774 ரன்களுடன் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர் முதலிடத்தில் உள்ளார். தரம்சாலா டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 120 ரன்கள் எடுத்தால், கவாஸ்கரை மிஞ்சி டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். 


1971ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் சுனில் கவாஸ்கர் சிறப்பாக செயல்பட்டார். அப்போது 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கவாஸ்கர் ஒரு இரட்டை சதம், 4 சதம், 3 அரைசதம் உள்பட 774 ரன்கள் அடித்து சாதனை படைத்திருந்தார். இந்த காலகட்டத்தில் கவாஸ்கரின் சராசரி 154.80 ஆக இருந்தது. 


டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள்:



  1. சுனில் கவாஸ்கர் vs வெஸ்ட் இண்டீஸ் (1971) - 4 போட்டிகள், 774 ரன்கள், 154.80 சராசரி, 4 சதங்கள்

  2. சுனில் கவாஸ்கர் vs வெஸ்ட் இண்டீஸ் (1978-79) - 6 போட்டிகள், 732 ரன்கள், 94.50 சராசரி,4 சதங்கள்

  3. விராட் கோலி vs ஆஸ்திரேலியா (2014-15) – 4 போட்டிகள், 692 ரன்கள், 86.50 சராசரி, 4 சதங்கள்

  4. விராட் கோலி vs இங்கிலாந்து (2016) – 5 போட்டிகள், 655 ரன்கள், 109.16 சராசரி, 2 சதங்கள்

  5. திலீப் சர்தேசாய் vs வெஸ்ட் இண்டீஸ் – (1971) 5 போட்டிகள் , 642 ரன்கள், 80.25 சராசரி, 3 சதங்கள்

  6. யஷஸ்வி ஜெய்ஸ்வால் vs இங்கிலாந்து (2024) - 4* போட்டிகள், 655* ரன்கள், 93.57 சராசரி, 2 சதங்கள்


யஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை இங்கிலாந்தில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் 8 இன்னிங்ஸ்களில் 93.57 சராசரியில் 655 ரன்கள் எடுத்துள்ளார், இதில் இரண்டு இரட்டை சதங்கள் மற்றும் இரண்டு அரை சதங்கள் அடங்கும்.