இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தற்போது தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி, ராஜ் கோட்டில் உள்ள சௌராஷ்ட்ரா மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் சர்ஃபர்ஸ்கான் அறிமுகமாகவுள்ளார். அதேபோல் இளம் வீரரான துருவ் ஜொரோலும் நாளை தனது சர்வதேச போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளது.
இந்திய அணிக்கு உள்ள சிக்கல்
இந்திய அணிக்கு உள்ள பெரும் பின்னடைவாக கருதப்படுவது, இந்த தொடர் முழுவதும் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் நங்கூரமாக கருதப்படும் விராட் கோலி விளையாடப்போவதில்லை. சொந்த காரணங்களுக்காக விராட் கோலி இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். அதேபோல், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல். ராகுல் இந்த தொடர் முழுவதும் விளையாடப்போவதில்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதுமட்டும் இல்லாமல் முதல் டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடிய ஜடேஜா இரண்டாவது டெஸ்ட்டில் விளையாடவில்லை. அவர் இந்த போட்டியில் அணியுடன் இணையவுள்ளார். மேலும், இரண்டாவது டெஸ்ட்டில் ஏற்பட்ட காயத்தால் மூன்றாவது டெஸ்ட்டில் இருந்து பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
இதுமட்டும் இல்லாமல் இந்திய அணிக்கு தற்போது உள்ள பெரும் தலைவலியாக பார்க்கப்படுவது, இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர்தான். ரோகித் சர்மா கடந்த ஓராண்டுக்கு மேலாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் சோபிக்காத நிலையில், மூன்றாவது டெஸ்ட்டில் என்ன செய்யப்போகின்றார் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இந்திய அணிக்கு தற்போது பேட்டிங் வரிசையில் இருக்கும் நம்பிக்கை என்றால் அது ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் மட்டும்தான். மற்றவர்கள் மீது நம்பிக்கை ஏற்படும் அளவிற்கு கடந்த இரண்டு போட்டிகள் அமையவில்லை.
பந்து வீச்சினைப் பொறுத்தவரையில் இந்திய அணிக்கு உள்ள ஒற்றை நம்பிக்கையாக இருப்பவர் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. நாளை நடக்கவுள்ள போட்டியில் முகமது சிராஜ் களமிறங்கினால் அணியின் வேகப்பந்து வீச்சு பலப்படும். அஸ்வின் சுழற்பந்து வீச்சு பட்டாளத்தை வழிநடத்தினாலும் அஸ்வின் தவிர மற்றவர்கள் இன்னும் கவனிக்கப்படும் அளவிற்கு அணிக்கு பங்களிப்பை வழங்கவில்லை. அஸ்வின் இதுவரை 499 சர்வதேச டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அவர் இன்னும் ஒரு விக்கெட்டினை எடுத்தால் 500 வது விக்கெட்டினை எட்டுவார்.
நாளைய போட்டிக்கான இரு அணிகள்
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், தேவ்தத் படிக்கல்.
இங்கிலாந்து: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), ஷோயப் பஷீர், டான் லாரன்ஸ், சாக் கிராலி, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), டாம் ஹார்ட்லி, ஆலி போப், ஒல்லி ராபின்சன், ஜோ ரூட், மார்க் வூட்.