இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 112 ஓவர்களில் 396 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 253 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று காலை (பிப்ரவரி 4) தொடங்கியது. இதில் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதனைத்தொடர்ந்து மறுபுறம் களத்தில் நின்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சதம் விளாசிய கில்:
இதனைத் தொடர்ந்து சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 52 பந்துகள் களத்தில் நின்று 29 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ராஜத் படிதர் 9 ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்தார் சுப்மன் கில். அப்போது சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த அக்ஸர் படேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் அதிரடியாக விளையாடி வந்த இந்திய அணி வீரர் சுப்மன் கில் 132 பந்துகளில் தன்னுடைய சதத்தை பதிவு செய்தார். இது சர்வதேச டெஸ்ட் போட்டியில் அவர் எடுத்திருக்கும் 3 வது சதம் ஆகும். அதன்படி, மொத்தம் 147 பந்துகள் களத்தில் நின்ற அவர் 11 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 104 ரன்கள் எடுத்தார்.
அதனைத்தொடர்ந்து களம் இறங்கிய அஸ்வின் 61 பந்துகள் களத்தில் நின்று 29 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகினர். இவ்வாறாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் எடுத்துள்ளது. அதன்படி இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி. பந்து வீச்சை பொறுத்த வரை இங்கிலாந்து அணி வீரர் டாம் ஹார்ட்லி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல் மற்றொரு வீரரான ரேகன் அகமது 24.3 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தற்போது இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.