உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து  காத்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பெற்ற தோல்விக்கு, ஆஸ்திரேலியாவை பழிவாங்கும் நோக்கில் இந்திய அணி களமிறங்கி உள்ளது


உலகக்கோப்பை இறுதி போட்டியில் பாதுகாப்பு குளறுபடி:


இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன்கில் ஆகியோர் களமிறங்கினார்கள். இதில், 7 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற சுப்மன் கில் 4 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.


கில்லின் விக்கெட்டை தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விராட் கோலி களம் இறங்கினார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த போட்டியின் 14ஆவது ஓவரில் பாலஸ்தீன ஆதரவாளர் ஒருவர் திடீரென மைதானத்தில் நுழைந்தார். பலத்து பாதுகாப்பு ஏற்பாட்டையும் மீறி, அவர் கோலியை கட்டிப்பிடிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோலியை கட்டிப்பிடிக்க முயற்சித்தவர், பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட முகக்கவசத்தை அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த டி ஷர்ட்டில் பாலஸ்தீனத்தை விடுவிக்க வேண்டும் என்றும் காசாவில் குண்டு போடுவதை நிறுத்த வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது. மைதானத்தில் நுழைந்த நபரால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.


நடந்தது என்ன?


பாலஸ்தீன ஆதரவாளர், பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. உலகக் கோப்பை இறுதி போட்டி நடைபெற்று வரும் மைதானத்தில் 6,000 காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதை எல்லாம் மீறி, மைதானத்தில் பாலஸ்தீன ஆதரவாளர் நுழைந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.  


முன்னதாக, போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி வந்தார். 2 சிக்ஸர்களை அதிரடியாக பறக்கவிட்ட அவர், 31 பந்துகளில் 4 பவுண்டரிகள் விளாசி 47 ரன்கள் எடுத்திருந்தார். 3 ரன்களில் அரைசதத்தை தவறவிட்டார். 63 பந்துகளில் 54 ரன்களை எடுத்திருந்தபோது, விராக் கோலி தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.                              


 






அதேபோல, 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்திருந்த ஸ்ரேயாஸ், கம்மின்ஸ் பந்தில் ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தற்போது, நிதானமாக ஆடி வரும் கே.எல். ராகுல், 86 பந்துகளில் 50 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்கு ரவீந்திர ஜடேஜா, நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்து வருகிறார்.