ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் எதிர்பாத்துக்கொண்டு இருக்கும் ஒற்றை போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மிகவும் பிரமாண்டமான ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கவுள்ளது. ஐசிசி நடத்தும் 13வது உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் இந்தியா அணி நடப்பு உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை சென்னை மைதானத்தில் வீழ்த்தியது. இந்த நம்பிக்கை மட்டும் இல்லாமல் நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியைச் சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இவையெல்லாம் அளிக்கும் நம்பிக்கை இந்திய அணி தனது மூன்றாவது கோப்பையை வெல்லும் என்ற உறுதியை ரசிகர்களுக்கு அளித்துள்ளது. 


இந்நிலையில் போட்டிக்கு முந்த நாளில் ஒவ்வொரு அணியின் கேப்டனும் செய்தியாளர்களைச் சந்திப்பது வழக்கும். இதனடிப்படையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், 


"ஒவ்வொரு வீரரும் தனது சொந்த விளையாட்டை விளையாட சுதந்திரம் கொடுக்கும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் அணுகுமுறையே அணியின் வெற்றிக்கு காரணம். சவாலான தருணங்களில் ஒவ்வொரு வீரருக்கும் டிராவிட்டின் அசைக்க முடியாத ஆதரவை ஒவ்வொரு வீரரும் பெற்றுள்ளனர். டிராவிட்டிற்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டிய பொறுப்பு இப்போது அணியின் மீது உள்ளது. ஏனெனில் இந்த குறிப்பிடத்தக்க சந்தர்ப்பத்தின் ஒரு பகுதியாக அவர் திகழ்கிறார்.


இந்திய அணிக்காக அவர் விளையாடத் தொடங்கியது முதல் தலைமைப் பயிற்சியாளராக தற்போது உள்ள வரை அணிக்காக அவரது பங்கு முற்றிலும் மகத்தானது.  பயிற்சியாளர் சில விஷயங்களுக்கு உடன்படவில்லை என்றால் கேப்டனால் சிறப்பாக அணியை வழிநடத்த முடியாது. ராகுல் பாய் எப்படி விளையாடினார் என்பது உங்களுக்குத் தெரியும். நாம் விளையாட விரும்பும் வழியில் சென்று விளையாடுவதற்கு அவர் எங்களுக்கு அந்த சுதந்திரத்தை வழங்கியதால் நான் உட்பட அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாட முடிகின்றது. 

இதுமட்டும் இல்லாமல், டி20 உலகக் கோப்பையின் போது கடினமான காலங்களில் வீரர்களுக்கு ஆதரவாக அவர் நின்ற விதம், அந்த அரையிறுதி வரை நாங்கள் நன்றாக விளையாடி இருந்தோம். சில சூழ்நிலைகளில் நடந்து கொண்ட விதமும் வீரர்களுக்கு அளித்த உத்வேகமும் உதவியாக இருந்தது. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வந்துள்ளதற்கு மிகமுக்கியமான காரணங்களில் அவரும் ஒரு பகுதி. அவருக்காக கோப்பையை வெல்வது எங்களின் கடமை. அணிக்குள் வெளிப்புற காரணங்களால்  கவனச்சிதறல்கள் ஏற்பட அனுமதித்தே இல்லை. மேலும் விமர்சனங்களால் வீரர்கள் பாதிக்கப்படுவதில்லை. 



 

தற்போது உள்ள இந்திய அணிக்குள் நானும் ராகுல் பாயும் உருவாக்கிய சூழலைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் - ஒரு குறிப்பிட்ட போட்டியின் ரசிகர்கள் தொடங்கி விமர்சகர்கள் வரை கொடுக்கும் அழுத்தம் சத்தம் அல்லது ஸ்கோரைப் பற்றி கவலைப்படாமல் வீரர்கள் நன்றாக இந்த உலகக்கோப்பையில் விளையாடியுள்ளனர்” இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.