மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை உறுதி செய்யும், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 01.30 மணியளவில் தொடங்க உள்ள இப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டியின் நேரலையை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஹாட் ஸ்டார் செயலியிலும் நேரடியாக கண்டுகளிக்கலாம்.


ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்:


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது. அதைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.  வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து ஆந்திராவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், வேகப்பந்து வீச்சில் மிரட்டிய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வாகை சூடியது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலை வகிக்கிறது.


தொடரை வெல்லப்போவது யார்?


இந்நிலையில் தொடரை வெல்லப்போவது யார் என்பதை உறுதி செய்யும் 3வது மற்றும் தொடரின் கடைசி ஒருநாள் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிரமாக வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.


இந்திய அணி நிலவரம்:


ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மிட்செல் ஸ்டார்க்கின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. கடந்த போட்டியில் இந்திய அணி வெறும் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கத்து. தொடரை வெல்ல கோலி, ரோகித், பாண்ட்யா, ராகுல் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள், இன்றைய போட்டியில் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டியது அவசியம். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் சூர்யகுமாருக்கு பதிலாக, இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சனை களமிறக்கவும் வாய்ப்புள்ளது. பந்துவீச்சிலும் கடந்த போட்டியை போன்று இல்லாமல், ஷமி, சிராஜ், பாண்ட்யா ஆகியோர் கட்டுக்கோப்புடன் செயல்பட வேண்டியது வெற்றிக்கு அவசியமாக உள்ளது.


ஆஸ்திரேலிய அணி:


டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதோடு, ஸ்மித், லபுசக்னே, ஸ்டோய்னிஸ் போன்ற வலுவான வீரர்களையும் கொண்டுள்ளது. அதோடு, ஸ்டார்க், சீன் அப்பாட் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை தந்து வருகின்றனர். இதனால், இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


நேருக்கு நேர்:


இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஒரு நாள் போட்டிகளில்  இதுவரை 145 முறை நேருக்கு நேர்மோதியுள்ளன. இதில் 81-ல் ஆஸ்திரேலியாவும், 54-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டத்தில் முடிவில்லை.


4 ஆண்டுகளுக்குப் பின்...


இதனிடையே, சென்னை சேப்பாக்கத்தில் 4 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச போட்டி நடைபெறுகிறது. முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கியது. அந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, நான்கு ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் நடைபெறும் போட்டியை நேரில் காண, தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். 


இந்திய உத்தேச அணி:


சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் அல்லது சஞ்சு சாம்சன், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா , ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது சிராஜ், முகமது ஷமி அல்லது உம்ரான் மாலிக் 


ஆஸ்திரேலிய உத்தேச அணி:


டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), மார்னஸ் லபுசக்னே, மிட்செல் மார்ஷ் அல்லது மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, சீன் அப்போட் அல்லது நாதன் எலிஸ்