U19 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் ட்ரினிடாட் அண்ட் டொபாகோவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்ற இந்திய கிரிக்கெட் அணியில், கேப்டன் உட்பட நான்கு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
U19 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் க்ரூப் பி பிரிவில் இடம் பெற்றிருக்கும் இந்திய அணி, லீக் சுற்று போட்டிகளில் விளையாடி வருகிறது. தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து, அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இன்று மோதி வருகிறது. இந்நிலையில், இந்திய அணி கேப்டன் யஷ் தல், துணை கேப்டன் ஷேக் ரசீத், வீரர்கள் வசு வட்ஸ், மனவ் பிரகாஷ் ஆகியோருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்துள்ளது. இதனால், இந்த வீரர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். மாலை அயர்லாந்துக்கு எதிராக நடைபெறும் போட்டியிலும் அவர்கள் பங்கேற்கவில்லை. அதனை அடுத்து, சோதனை முடிவுகள் வந்ததில் நான்கு வீரர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் முக்கியமான வீரர்கள் இல்லாமல் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது அயர்லாந்து அணி. இதனால் பேட்டிங் களமிறங்கிய இந்திய அணிக்கு, டாப் ஆர்டர் பேட்டர்களின் சிறப்பான ஆட்டத்தில் ஸ்கோர் உயர்ந்தது. இதனால் 50 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 307 ரன்கள் சேர்த்திருக்கிறது இந்திய அணி. அதனை தொடர்ந்து சேஸிங் களமிறங்கிய அயர்லாந்து அணி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இந்த போட்டியை வென்று அடுத்து வரும் லீக் போட்டிகளையும் வென்றால், இந்திய அணிக்கு காலிறுதி வாய்ப்பு உறுதியாகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்