ஒருநாள் உலகக் கோப்பை 2023க்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் இன்று அறிவித்தார். இந்த முறை ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பு வகிக்கிறார். இந்தநிலையில், மதியம் உலகக் கோப்பை அணி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ரோஹித்தின் பழைய ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணி, முன்னதாக தேர்வு செய்யப்பட்டபோது ரோஹித் சர்மா கிட்டத்தட்ட அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால், ஒரு பந்துவீச்சாளரை மனதில் கொண்டு ரோஹித் சர்மா இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக பியூஷ் சாவ்லா தேர்வு செய்யப்பட்டார்.






2011 ஒருநாள் உலகக் கோப்பை அணியில் ரோஹித் ஷர்மா இடம் பெறாததால், தனது ஏமாற்றத்தை ட்வீட் மூலம் வெளிப்படுத்தினார். அப்போது ரோஹித் தனது சமூக வலைதள பதிவில், உலகக் கோப்பை அணியில் இடம் பெறாததில் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன். நான் இங்கிருந்து இன்னும் முன்னேறி செல்ல வேண்டும். இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன..?” என குறிப்பிட்டு இருந்தார். 


ரோஹித் சர்மா தற்போது சிறந்த ஒருநாள் வீரர்:


இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா தற்போது சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுகிறார். 2013 சாம்பியன்ஸ் டிராபியில் தொடக்க வீரராக களமிறங்கிய பிறகு, உலக கிரிக்கெட்டில் அவரின் உயரம் எங்கேயோ சென்றது. ரோஹித் சர்மா ஒருநாள் போட்டியில் பல தவிர்க்கமுடியாத சாதனைகளை படைத்தார். அதில், ஒன்று ஒருநாள் போட்டிகளில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனை. 


இந்தநிலையில், வரவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை ரோஹித் சர்மாவுக்கு கேப்டனாகவும், தொடக்க வீரராகவும் மிகவும் முக்கியமானது.   கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ரோஹித் தலைமையில் இந்திய அணி விளையாடியபோது, ​​அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான தோல்வியுடன் வெளியேறியது. 


மேலும் படிக்க: 800 Trailer: குடியுரிமையே இல்லாமல் கொத்தடிமையாக வந்தவன்.. உலகமே போற்றும் பெஸ்ட் பவுலர்.. வெளியானது 800 படத்தின் ட்ரெய்லர்!


 உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ம் தேதி சென்னை மைதானத்தில் எதிர்கொள்கிறது.


ஒருநாள் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி :


ஷுப்மான் கில், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், முகமது சிராஜ், முகமது சிராஜ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர்.


உலகக் கோப்பைக்கு 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டாலும், அணியில் மாற்றம் செய்ய ஒருசில வாய்ப்பு உள்ளது. அறிவிக்கப்பட்ட அனைத்து அணிகளும் தங்கள் அணியில் மாற்றம் செய்ய ஐசிசி செப்டம்பர் 28ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. 15 பேர் கொண்ட இறுதிப் பட்டியலை செப்டம்பர் 28ஆம் தேதி வாரியம் சமர்ப்பிக்கும்.