இன்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் டர்பன் மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி டர்பனில் நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து வெற்றியை தக்க வைக்கும் முனைப்புடன் களம் இறங்கவுள்ளது. ஆனால் இன்று டர்பனில் வானிலை எப்படி இருக்கும்? இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டியில் மழை வில்லனாகுமா? என்பதை இங்கே பார்க்கலாம்.
டர்பனில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதா?
இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளதா? வானிலை ஆய்வு மையத்தின்படி, திங்கள்கிழமை காலை டர்பனில் பலத்த மின்னல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இன்று மாலை டர்பனில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் டி20 போட்டியின் போது மழை பெய்ய 75 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், இன்று டர்பனில் வெப்பநிலை சுமார் 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இந்த மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கைவிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிட்ச் எப்படி..?
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடைபெறும் டர்பன் ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் குவிக்க சாதகமான பிட்சாக பார்க்கப்படுகிறது. இந்த ஆடுகளத்தில் சராசரி ஸ்கோர் 170 ரன்கள். அதாவது, ஒரு இன்னிங்ஸில் ஒரு அணி தோராயமாக 170 ரன்கள் எடுக்கிறது. இந்த சராசரி பந்து வீச்சாளர்களுக்கு நல்லதல்ல. இது தவிர, டாஸ் வென்ற அணி முதலில் பீல்டிங் செய்ய விரும்பும். ஏனெனில் ரன் சேஸிங் செய்யும் அணிதான் இங்கு அதிக வெற்றி பெற்றுள்ளது. மேலும், வேகப்பந்துவீச்சாளர்கள் இந்த விக்கெட்டில் அதிக பவுன்ஸ்களை வீச முயற்சிப்பார்கள். இது பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வெல்லுமா இந்திய அணி..?
முன்னதாக, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அதே நேரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்த டி20 தொடருக்கு பிறகு இரு அணிகளுக்கு இடையே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.
கணிக்கப்பட்ட இந்திய அணி விவரம்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, முகேஷ் குமார், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங்.
கணிக்கப்பட தென்னாப்பிரிக்கா அணி விவரம்:
ரீசா ஹென்ட்ரிக்ஸ், மேத்யூ பிரெட்ஸ்கே, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், டிரிஸ்டியன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், லிசாட் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி